நல்ல நட்புக்கு இலக்கணமாக வரலாறு கூறும் உதாரணங்கள்

நல்ல நட்புக்கு இலக்கணமாக வரலாறு கூறும் உதாரணங்கள்

3 mins read
b271d9ad-188c-47c2-aee0-daf6cee60d5b
ஔவையார் வாழ்ந்தால் தமிழ் வளரும் என அதியமான் அரிய நெல்லிக்கனியை அவருக்கு வழங்கிய காட்சியைச் சித்திரிக்கும் தற்காலச் சிலை. - படம்: விக்கிப்பீடியா.

தொகுத்தவர்:

நட்பு என்பது சுயநலம் இல்லாமல் மற்றவர் நலனுக்காக உருகும் மெழுகாய் இருக்க வேண்டும்.

தன்னை கசக்கிப் பிழிந்து, சக்கையாக மாற்றிக் கொண்டு, பிறருக்கு சுவை தரும் கரும்புச் சாறாக இருக்க வேண்டும்.

ஒருவரது கண்ணீரைத் துடைத்து விடும் விரலாய் இருக்க வேண்டும்.

பணத்தைக் கடனாகக் கொடுத்து வாங்குவது நட்பல்ல. குணத்தை நன்றிக் கடனாய் காட்டுவதே நட்பு.

பிரச்சினை வரும்போது விரல்களைப் போல் விலகி இருக்காமல், உதடுகளைப் போல் ஒட்டி இருப்பது நட்பு. நட்பு என்பது அன்பினால் உருவான ஏணி.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு - என்றார் வள்ளுவப் பெருந்தகை.

நண்பனுக்கு ஒரு துன்பம் வரும்போது தானாக விரைந்து வந்து உதவுதல்தான் நல்ல நட்பாக இருக்கும்.

வரலாற்றுப் பக்கங்களில் எல்லாம் நட்பின் சுவடுகள் இன்னும் அழியாமல்தான் இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

நாடு போற்றும் நல்ல நட்பினை நம் இதிகாசங்களும் புராணங்களும் சிறப்பிக்கத் தவறவில்லை.

ஔவையார் - அதியமான் நட்பு

ஒருமுறை மன்னன் அதியமான் வேட்டைக்காகக் காட்டிற்குச் சென்று இருந்தான். அங்கு சில பழங்குடி மக்களை அவன் சந்தித்தான்.

அவர்கள் அவனுக்கு ஓர் அரிய வகை கறுப்பு நெல்லிக்கனியைக் கொடுத்தனர். அந்த அதிசய கனிக்கு இளமையை அளித்து நீண்ட நாள் வாழவைக்கும் மகிமை இருந்தது.

எல்லோரும், அக்கனியை மன்னன்தான் உண்பார் என நினைத்து இருந்தனர். ஏனெனில் அது நீண்ட ஆயுள் தரும் அற்புத கனி.

ஆனால், அதியமானோ அக்கனியை ஔவையாரை உண்ண வைத்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

தான் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தால், தானும் தன் மக்களும் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

அதே சமயம், அந்தக் கனியை ஔவையார் உண்டால் அவர் பாடும் பாடல்கள், எழுதும் நூல்கள் மூலமாக தமிழ் வளர்வதோடு, எதிர்காலத் தலைமுறையினரையும் அது வாழவைக்கும் என்று நினைத்ததாலே அதியமான் அந்தக் கனியை ஔவைக்கு வழங்கினார்.

கோப்பெருஞ்சோழன்- பிசிராந்தையார் நட்பு

நட்பினை நேரில் முகம் பார்த்துத்தான் தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை.

அன்று புரவலரும், புலவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ளவில்லை. என்றாலும் இது அல்லவோ அற்புதமான நட்பு என்று கூறும் அளவுக்கு எல்லோருக்கும் பாடமாக அமைந்தார்கள்.

ஒருவரின் புகழ் பற்றி மற்றொருவர் அறிந்து நட்பு பாராட்டினார்கள். தனது நண்பர் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிரிழப்பதைக் கேள்விப்பட்டு தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தார் பிசிராந்தையார்.

நட்பில் பள்ளிகளின் பங்களிப்பு

பள்ளிகளும் நட்பு தினத்தை ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் கொண்டாடுகிறது.

எங்கள் சிறந்த நண்பருக்கு ஒரு கடிதம் எழுத பள்ளி எங்களை ஊக்குவிக்கிறது. எங்கள் பள்ளி நேரத்தில் கதைகள் மூலம் நல்ல நட்பைப் பற்றி எங்கள் ஆசிரியர்களும் முதன்மை ஆசிரியர்களும் எடுத்துரைப்பார்கள்.

ஒன்றுக்கு ஒன்று கலந்துரையாடலின்போது கொடுமைப்படுத்துதல் நடவடிக்கைகளை முறியடிப்பதன் மூலம் நல்ல நட்பைப் பேண எங்களுடைய ஆசிரியர்கள் வழிகாட்டுவார்கள்.

குறிப்புச் சொற்கள்