தமிழ் முரசு செய்தித்தாளைப் பற்றி அறிய கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 17), டாமாய் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த எட்டு தமிழ் மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் ‘எஸ்பிஎச் மீடியா’ நிறுவனத்திற்கு வந்தனர்.
செய்தித்தாளின் வரலாறு, செய்தியாளர்கள், செய்தி ஆசிரியர்களின் பணிகள், செய்திகளைத் திரட்டும் முறை, நாளிதழ் அச்சிடப்படும் விதம், தினமும் இடம்பெறும் வெவ்வேறு செய்திகள் குறித்து மாணவர்கள் விரிவாகக் கற்றுக்கொண்டனர்.
பயணத்திற்கு முன்பே மாணவர்கள் அனைவரும் செய்திப்பிரிவினரிடம் கேட்பதற்காகச் சிறப்பு வினாக்களைத் தயார் செய்து எடுத்து வந்திருந்தனர்.
வரவிருக்கும் தேசிய தின அணிவகுப்பு போன்ற பெரிய தேசிய நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளை எவ்வாறு சேகரிக்கின்றனர் என்பதை மாணவர்கள் அறிந்துகொண்டனர்.
“இன்று செய்தியாளர்கள் சந்திக்கும் சவால்களைப் பற்றியும் நான் கற்றுக்கொண்டேன்,” என்றார் மாணவி மிர்த்திகா, 10.
தொடர்ந்து, செய்திப்பிரிவைச் சுற்றிப்பார்த்த மாணவர்கள், அங்கிருந்த துணை ஆசிரியர்கள், சமூக ஊடகக் குழுவினர், பக்க வடிவமைப்பு ஆசிரியர்கள் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினர்.
“செய்தித்துறையில் இருக்கும் அனைவரும் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதைத் தவிர, எது சரியான செய்தி என்பதையும் முடிவு செய்ய வேண்டும்,” என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்தார் மாணவி ஆதன்யா, 10.
இக்கல்விச் சுற்றுலா மாணவர்களுக்குச் செய்தித்துறையைப் பற்றிய புதிய புரிதலையும் சிறந்த அனுபவத்தையும் வழங்கியது.

