சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வண்ணம் தமிழ்மொழி விழாவில் வரலாற்றைக் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்தது.
தமிழ்மொழி விழா 2025ன் கருப்பொருள் ‘இளமை’. அதற்கேற்ப இந்த ஆண்டு விழாவில் இளையர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிற்பிகள் மன்றம் நடத்திய இந்த நிகழ்ச்சி முன்னாள் ஃபோர்ட் தொழிற்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்றது.
‘இடம், பொருள், தமிழ் 2’ என்ற இந்த நிகழ்ச்சியில் தொடக்கநிலையிலும் உயர்நிலைப் பள்ளியிலும் பயிலும் 20 மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் த. ராஜசேகர் கலந்துகொண்டார்.
இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டிஷ் படையினர் ஜப்பானியரிடம் சரணடைந்த இடம் இந்த முன்னாள் ஃபோர்ட் தொழிற்சாலை. அந்தக் கட்டடம் ஒரு தேசிய நினைவுச் சின்னமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சிங்கப்பூரின் வரலாற்றையும் வரலாறு தொடர்பான சொற்களையும் சுவாரசியமான வழியில் கற்பதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டிருந்தது.
காட்சிக்கூடத்தில் கற்றல் உலா சென்ற மாணவர்கள் அதற்குப் பின் சொல்லாட்டப் போட்டியில் பங்கெடுத்தனர். காட்சிக்கூடத்தில் பார்த்த அம்சங்களில் இருந்து நினைவுகூர்ந்து பதில்களை அளித்தனர்.
இரண்டாம் உலகப் போரின்போது வாழ்க்கைச் சூழல் எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தனர் மாணவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
சிற்பிகள் மன்றம் 15வது முறையாக மாணவர்களுக்காக இந்த வெளிப்புற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.