சித்திரை மாதத்தின் முதல் நாளன்று கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மிக முக்கியமான பண்பாட்டுத் திருவிழா ஆகும்.
இது வசந்த காலத்தின் தொடக்கத்தையும், புதிய நம்பிக்கைகளையும் குறிக்கிறது.
தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட பெயரைக் கொண்டிருக்கும்.
60 ஆண்டுகள் முடிந்தவுடன் மீண்டும் சுழற்சி முறையில் முதலாம் ஆண்டிலிருந்து தொடங்கும்.
முக்கிய மரபு
சித்திரைக் கனி: புத்தாண்டு அன்று அதிகாலையில் மங்களகரமான பொருள்களைக் காண்பது ஆண்டு முழுவதும் செழிப்பைத் தரும் என்பது நம்பிக்கை.
புத்தாண்டு அன்று அதிகாலையில் ஒரு தட்டில் தங்கம், வெள்ளி நாணயங்கள், மலர்கள், தானியங்கள், வெற்றிலைப் பாக்கு, பழங்கள், கண்ணாடி போன்ற மங்களகரமான பொருள்களைப் பார்ப்பது அந்த ஆண்டு முழுவதும் செழிப்பைத் தரும் என்பது நம்பிக்கை.
அறுசுவை உணவு
குறிப்பாக வேப்பம்பூ பச்சடி அன்று செய்யப்படுகிறது. இதில் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம் மற்றும் துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் கலந்திருக்கும். இது வாழ்க்கையில் இன்பம், துன்பம் என அனைத்தும் கலந்தே இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
உலகளாவிய கொண்டாட்டம்
தமிழகம் தவிர்த்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் தமிழ்ப் புத்தாண்டை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
கொண்டாடும் முறை
வாசல் கோலம்: வீட்டின் வாசலில் வண்ணக் கோலமிட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டி அலங்கரிப்பார்கள்.
புத்தாடை: குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்கள். பலரும் கோவில்களுக்குச் செல்வார்கள்.
2026ஆம் ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் பன்முகத்தன்மை
பைசாகி (பஞ்சாப்), தமிழ்ப் புத்தாண்டு (தமிழ்நாடு), பொய்லா போய்ஷாக் (வங்காளம்) என பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இந்தக் கொண்டாட்டங்கள் கலாசாரம், சமயம், விவசாய ரீதியிலான ஒரு முக்கியமான புதுப்பிப்பைக் குறிக்கின்றன.
இலங்கை ‘சிங்கள - தமிழ்ப் புத்தாண்டு’
இலங்கையில் தமிழ்ப் புத்தாண்டு ‘சிங்கள - தமிழ் புத்தாண்டு’ என ஒரு தேசிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அங்கு இது அரசு விடுமுறை தினமாகும். சுவை உணவுகளும் அதிகமிருக்கும்.
பெரியவர்கள் இளையவர்களுக்குப் புத்தாண்டுப் பணம் வழங்கும் வழக்கம் இன்றும் அங்கு மிகவும் பிரபலம்.
பாரம்பரிய விளையாட்டுகளான வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல் போன்றவை கிராமப்புறங்களில் கோலாகலமாக நடக்கும்.
நாடுகளும் கொண்டாட்ட முறைகளும்
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் ஏப்ரல் 13 முதல் 16ஆம் தேதி வரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிக விமரிசையாகக் களை கட்டுகின்றன.
தாய்லாந்து சொங்க்ரான் (Songkran)
அந்நாட்டின் முக்கிய வீதிகளில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி மகிழும் மாபெரும் நீர் விளையாட்டாக இது உருவெடுத்துள்ளது.
புத்தர் சிலைகள் மீது நறுமண நீர் ஊற்றுதல், பெரியவர்களின் கைகளில் நீர் ஊற்றி ஆசி பெறுதல் இன்றும் பாரம்பரியமாகத் தொடர்கிறது.
மியன்மார் திங்க்யான் (Thingyan)
வீதியெங்கும் மேடைகள் அமைக்கப்பட்டு மக்கள் மீது நீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. ’படோக்’ மலர்கள் சூடியும், வெல்லம் கலந்த இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
வெறும் மகிழ்ச்சிக்காக மட்டுமன்றி, கடந்த கால கசப்புணர்வை மறந்து, மனத்தூய்மையுடன் புதிய ஆண்டைத் தொடங்குவதை நீர் தெளிப்பது குறிக்கிறது.
கம்போடியாவின் சோல் ச்னம் தமே (Chaul Chnam Thmey)
இது ஒரு அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மடாலயங்களில் மணல் குன்றுகள் அமைத்து வழிபாடு நடத்துவதும், மூங்கில் குழாய்க்குள் சமைக்கப்படும் ‘க்ரலான்’ இனிப்பு வகைகளும் இங்கு சிறப்பு. மூன்று நாள்களுக்குக் கலை நிகழ்ச்சிகள், ஆலய வழிபாடுகளுடன் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
லாவோஸ் பெளன் பி மாய் (Boun Pi Mai)
லாவோஸ் மக்களின் புத்தாண்டு நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. வண்ணமயமான ஊர்வலங்கள், நீர் தெளித்தல் நிகழ்வுகளுடன் களைகட்டும். மிகவும் அமைதியான முறையில் கலாசார அணிவகுப்புகளுடன் இவ்விழா நடைபெறுகிறது. நல்வாழ்த்துகளைப் பகிரும் விதமாக ஒருவருக்கொருவர் மணிக்கட்டில் வெள்ளை நூல் கட்டும் சடங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நான்கு நாடுகளிலுமே வீடுகளைச் சுத்தப்படுத்துதல், புத்தாடை அணிதல், பெரியவர்களிடம் ஆசி பெறுதல், விலங்குகளை விடுவித்து நல்ல செயல்களில் ஈடுபடுதல் போன்றவை இவ்விழாவின் பொதுவான அம்சங்களாகும்.
ஏப்ரல் மாதக் கோடையைத் தணிக்க உதவும் வகையில், உற்சாகமான நீர் விளையாட்டுகள் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளைப் பெருமளவில் கவர்ந்து வருகின்றன

