தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்களிடம் மொழி, வாசிப்பை ஊக்குவிக்கத் தமிழ் கதைசொல்லும் அமர்வுகள்

4 mins read
88903996-9de0-4c3e-8d61-59a73172af12
கதை சொல்லல் அமர்வைத் தொடர்ந்து தங்களுக்கு விருப்பமான கதை புத்தகங்களை இரவல் பெற்றுச் செல்லவும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். தங்களுக்கு விருப்பமான நூல்களுடன் அமர்வில் பங்கேற்ற மாணவர்கள், கதைசொல்லிகள். இடம்: கேலாங் ஈஸ்ட் வட்டார நூலகம். - படம்: லாவண்யா வீரராகவன்

தமிழ் மரபுக்கும் கதைகளுக்கும் நெடுந்தொடர்புண்டு. தலைமுறை தலைமுறையாகச் சமூக மரபுகள், பழக்க வழக்கங்கள், நீதிநெறிகள், வாழ்வியல் கூறுகள் என அனைத்தும் கதை வழியே கடத்தப்பட்டு வருகின்றன.

தற்போதைய சூழலில் தமிழ் மாணவர்களிடையே மொழிப் புழக்கத்தை அதிகரிக்கவும், வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் எடுக்கப்பட்டு வரும் பலவகை முயற்சிகளில் ஒரு பகுதியாக மாதாந்திரக் கதைசொல்லல் அமர்வுகளைக் கையிலெடுத்துள்ளது தேசிய நூலக வாரியம்.

“குழந்தைகளின் படைப்பாற்றலையும், சமூகம் சார்ந்த பார்வை, விழிப்புணர்வையும் கதைகள் மேம்படுத்துகின்றன. ஒரு நல்ல கதை பொழுதுபோக்காக மட்டும் அமையாமல், உலகம் குறித்த புரிதலைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும்,” என்று தெரிவித்தார் தேசிய நூலக வாரியத்தில் நூலகராகப் பணியாற்றும் ஜமுனா.

இது வயதுக்கு ஏற்ற கதைப் புத்தகங்களை அறிமுகம் செய்யும் நோக்கம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தன்னார்வக் கதை சொல்லிகள் வழிநடத்தும் இந்த 30 நிமிட அமர்வுகள் நான்கு முதல் எட்டு வயதுடைய குழந்தைகளுக்காகத் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சார்ந்த கருப்பொருள்கள், விலங்குகள், பறவைகள் சார்ந்த கற்பனைக் கதைகள், அறிவியல் புனைவு என வெவ்வேறு தலைப்புகளில் இவை நடைபெறுகின்றன.

மாணவர்களின் தன்னம்பிக்கையையும் பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையிலான செயல்பாடுகளுடன் இவை அமைந்துள்ளதாகவும் நூலக வாரியம் சொன்னது.

கதை அமர்வுகளும், கதைசொல்லிகளும் 

தீவெங்கிலும் உள்ள பல்வேறு நூலகங்களில் 2025ஆம் ஆண்டு 168 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக வாரியம் கூறியது. மொத்தம் 42 அமர்வுகள் இதுவரை நடந்து முடிந்துள்ளன.

நூலக வளாகங்களில் மாதம் ஒருமுறை இலவசமாக நடைபெறும் இந்த அமர்வுகள் தன்னார்வக் கதைசொல்லிகளால் வழிநடத்தப்படுகிறது.

கல்வியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என மாறுபட்ட பின்புலங்களிலிருந்து கதைசொல்லிகள் இவற்றை வழிநடத்துகிறார்கள். இதுவரை 14 தன்னார்வலக் கதைசொல்லிகள் இணைந்துள்ளதாக வாரியம் தெரிவித்தது.

கதைகளை உருவாக்க ஊக்குவித்த ‘கொக்கரக்கோ’

அமர்வின் முடிவில் கதைகளையும், தமிழ்ப் பாடல்களையும் அனைவரது முன்னிலையிலும் படைக்கும் மாணவி. இடம்: தெம்பனிஸ் வட்டார நூலகம். 
அமர்வின் முடிவில் கதைகளையும், தமிழ்ப் பாடல்களையும் அனைவரது முன்னிலையிலும் படைக்கும் மாணவி. இடம்: தெம்பனிஸ் வட்டார நூலகம்.  - படம்: லாவண்யா வீரராகவன்

பாடல், விடுகதைகள் எனக் குழந்தைகளை ஈர்க்கும் அம்சங்களுடன் விலங்குகள், பறவைகள், காடு என வேறு உலகத்திற்கே அழைத்துச் செல்கிறார் கதைசொல்லி சுடர்மொழி.

கடந்த நான்காண்டுகளாகக் கதை சொல்லிவரும் இவர் தெம்பனிஸ் வட்டார நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமையன்று இந்தக் ‘கொக்கரக்கோ’ அமர்வை வழிநடத்துகிறார்.

உள்ளூர்க் கருப்பொருள், தனிப்பயனாக்கப்பட்ட பாடல்கள்

சிங்க நடனம், இளவரசர் சங் நீல உத்தமா என உள்ளூர் கருப்பொருள்களில் அமைந்த கதைகளைப் பாடல்கள், ஓசைகளுடன் உற்சாகமாகக் கதைசொல்கிறார் கதைசொல்லி பிரியா கணேசன்,46.

மெர்லயன், மீ கொரேங், டுரியன் எனக் குழந்தைகள் சிங்கப்பூர்ச் சமூகத்தில் பார்க்கும் பொருள்கள், இடங்கள், பழகும் சூழல்குறித்த பாடல்களைத் தாமே இயற்றி, பாடி கதைகளுடன் கோத்துப் படைக்கிறார் இவர்.

கடந்த மூன்றாண்டுகளாகக் குயின்ஸ்டவுன் வட்டார நூலகத்தில் கதைசொல்லும் இவர் சிறார் எழுத்தாளரும் ஆவார். இவரது அமர்வு ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமையன்று மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

பொம்மைகள் சொல்லும் கதைகள்

கைப்பாவைகளை ஏந்தி தெனாலிராமன் கதையை உரையாடல் பாணியில் சொல்லும் மாணவர்கள். இடம்: கேலாங் ஈஸ்ட் வட்டார நூலகம். 
கைப்பாவைகளை ஏந்தி தெனாலிராமன் கதையை உரையாடல் பாணியில் சொல்லும் மாணவர்கள். இடம்: கேலாங் ஈஸ்ட் வட்டார நூலகம்.  - படம்: லாவண்யா வீரராகவன்

கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பொம்மைகளாகத் தோன்றி கதை சொல்லும் சுவாரசியமான பாணியில் கதை சொல்லல் அமர்வை வழிநடத்துகிறார் கதைசொல்லி சுபா.

கேலாங் ஈஸ்ட் வட்டார நூலகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் கதைசொல்லிவரும் இவர், கதைகளில் வரும் ஒவ்வொரு கதாபத்திரங்களையும் தன் கைகளாலேயே பொம்மலாட்ட பாணி கைப்பாவைகளாகச் செய்து, அவற்றைக் குச்சிகள் கொண்டு ஆடிப்பாடி நடிக்க வைத்து, பின்னணிக் குரலில் கதை சொல்கிறார் இவர்.

‘காமிக்ஸ்’ பாணிப் படக்கதைகள்

பெரிய வளைவான சுவரில் ‘காமிக்ஸ்’ பாணியில் அமைந்த படக்கதைகளைக் காட்டியும், கதைகளில் கற்றவற்றைக் குறித்த புதிர்களுடனும் உற்சாகமான கதை சொல்லல் அமர்வு மத்திய பொது நூலகத்தில் மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.

கற்பனைக் கதைகளுடன், கதைகளின் இடையில் கேள்வி பதில்கள், படம் பார்த்துப் பதில் சொல்லும் புதிர்கள், பெற்றோர் பிள்ளைகள் பிணைப்பை ஊக்குவிக்கும் நோக்கில் இருவருக்குமான விளையாட்டுகளுடன் இவற்றை வழிநடத்துகிறார் செளந்தர்யா.

மாணவர்களின் ஆர்வம்

தெம்பனிஸ் வட்டார நூலகத்தில் பெற்றோருடன் அமர்ந்து கதை படிக்கும் மாணவர்கள். 
தெம்பனிஸ் வட்டார நூலகத்தில் பெற்றோருடன் அமர்ந்து கதை படிக்கும் மாணவர்கள்.  - படம்: லாவண்யா வீரராகவன்

கதை சொல்லும் அமர்வில் ஆர்வத்துடன் கதை கேட்ட பாலர் பள்ளி மாணவி சிவமதி சிவானந்தம், 5 “இந்த அமர்வின் மூலம் தண்ணீரை வீணடிக்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன்,” என்றார். தேவதையும் விறகுவெட்டியின் கதையையும் மாணவர்கள் முன் சொல்லிக்காட்டிக் கைதட்டல்களையும் அள்ளினார் சிவமதி.

தனக்குக் கதை சொல்வது மிகவும் பிடிக்கும் என்று சொன்ன மாணவி பிரத்னியா, 5 இப்போதே அடுத்த மாத அமர்வுக்கான தயாரிப்புகளுக்காகக் கதைப் புத்தகங்களை ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்தார்.

தன் தாய் தந்தையர் தனக்கு எப்போதும் கதை சொல்வார்கள் என்றும், ராஜா கதைகளைக் கேட்பது பிடிக்குமென்றும் சொன்னார் மற்றொரு மாணவர் ஜிவின் ரகுராமன்,5.

கதைகள்மூலம் நாம் எப்படி நடந்துகொள்ளலாம், எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்கிறேன் என்றார் மாணவி ர‌ஷ்மிகா.

என் தந்தை சொல்லிக்கொடுத்த கதைகளை என் நண்பர்கள்முன் சொல்வது மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார் ஆதிதேவ். கதைகள் படிப்பதை விடக் கேட்பது அதிகம் பிடிக்குமென்றார்.

“இங்குத் தொடர்ந்து கதைகேட்க வருவதாகக் கூறிய மாணவர் அதிரன் மதீஸ், “டண்டன டண்டன் எனச் சிங்கப் பாடல் பாடியது மகிழ்ச்சியளித்தது” என்று பாடல் பாடியபடியே சொன்னார்.

தெனாலிராமன் கதை கேட்டது மகிழ்ச்சியளித்தது. ஆசிரியர் சொன்னபடி நூலகத்திலிருந்து கதைப் புத்தகங்கள் எடுத்துச்சென்று வாசிப்பேன்,” என்றார் மாணவர் விஜய் மித்ரன்.

படங்கள்: தேசிய நூலக வாரியம்

குறிப்புச் சொற்கள்