சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வேறுபாடின்றி அனைவரையும் கவரும் டிஸ்னி நிகழ்ச்சியைச் செந்தோசாவில் காண ஓர் அரிய வாய்ப்பு!
‘லெட்ஸ் செட் செயில் வித் டிஸ்னி குரூஸ் லைன்’ என்ற பெயரில் நடைபெறும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி, ஜூன் 24 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறுகிறது.
செந்தோசா மேம்பாட்டுக் கழகமும் டிஸ்னி குரூஸ் லைனும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி, டிஸ்னி அட்வென்ச்சர் கப்பலில் இடம்பெறும் ஏழு கருப்பொருள் பகுதிகளைச் செந்தோசா முழுவதும் உயிர்ப்பிக்கிறது.
எவற்றை எதிர்பார்க்கலாம்?
விவோசிட்டியிலிருந்து இயங்கும் செந்தோசா எக்ஸ்பிரஸ் ரயிலின் வெளிப்புறம் கேப்டன் மிக்கி மவுஸ், கேப்டன் மின்னி மவுஸ் என புகழ்பெற்ற இரண்டு கதாபாத்திரங்களின் உருவங்களுடன் புதிய தோற்றத்தில் மிளிர்கிறது.
செந்தோசாத் தீவு முழுதும் பயணம் செய்ய வழிசெய்யும் கம்பிவட வண்டிகளும் (cable cars), டாய் ஸ்டோரி, டிஸ்னி டிஸ்கவரி ரீஃப் உள்ளிட்ட கருப்பொருள்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
‘இவென்ட் பாஸ்போர்ட்’ என்ற நடவடிக்கைப் புத்தகம் வருகையாளர்களுக்கு வழங்கப்படும்.
செந்தோசாவின் ஒவ்வொரு பகுதிக்குச் செல்லும்போதும், இந்தப் புத்தகத்தில் முத்திரைகள் சேகரிக்க சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குறைந்தது எட்டு இடங்களில் முத்திரைகளைப் பெற்றால், டிஸ்னி கதாபாத்திரங்கள் கொண்ட ஒட்டுவில்லைகளைக் கட்டணமின்றி பெறலாம்.
கண்ணைக் கவரும் கதாபாத்திரங்கள்
‘சென்சுரி ஸ்கேப்’ செல்லும் வழியில் உள்ள சுவர்களில், டிஸ்னி இளவரசிகளை மையமாகக் கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
‘பிக் ஹீரோ 6’ன் முதன்மைக் கதாபாத்திரமான பேமேக்ஸின் ஆறு மீட்டர் உயரமுள்ள சிலை பாலவான் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ளது.
அதன் அருகில், டாய் ஸ்டோரியின் கதாபாத்திரங்களைக் கொண்ட விளையாட்டுப் பகுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் எடுக்க ஏதுவாகவும் அவ்விடம் வண்ண வண்ண விளக்குகளுடனும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் மிக்கி மவுஸ் உருவம், மார்வெல் கதாபாத்திரங்கள் எனப் புகைப்படம் எடுப்பதற்கான இடங்களுக்குப் பஞ்சமே இல்லை.
சூரியன் மறைந்தாலும் சாகசத்திற்கு முடிவில்லை
இரவு நேரத்தில் செந்தோசா முழுவதும் வண்ணமயமான விளக்குகளால் புதுப் பொலிவுடன் மின்னுகிறது.
குறிப்பாக, தீவின் ஆகத் தெற்குப் பகுதியில் ‘ஃபைண்டிங் நீமோ’, ‘த லிட்டில் மெர்மெய்ட்’, ‘லிலோ அண்ட் ஸ்டிட்ச்’, ‘மோவானா’ ஆகிய டிஸ்னி, பிக்சார் கதைகளை நினைவூட்டும் ஒளி அமைப்புகள் பார்வையாளர்களை வேறோர் உலகிற்கே அழைத்துச் செல்கின்றன.
இந்நிகழ்ச்சிக்காகவே, தீவின் அந்தக் குறிப்பிட்ட பகுதி இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
டிஸ்னி ரசிகர்களுக்கு இந்த ‘லெட்ஸ் செட் செயில் வித் டிஸ்னி குரூஸ் லைன்’ நிகழ்ச்சி மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

