ஏழு நாள்களில் இரண்டு சாதனைகளைப் படைத்து, சிறுவர் உலகச் சாதனைகளில் இடம்பெற்றுள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஆரியா பாட்டாச்சார்ஜி.
முதல் சாதனை: ஒற்றைக் கை ‘கார்ட்வீல்ஸ்’
நாள்: 2025 அக்டோபர் 26
விவரம்: 4 முதல் 6 வயதுப் பிரிவில், ஆக அதிகமான ஒற்றைக் கை ‘கார்ட்வீல்ஸ்’ (Cartwheels) செய்து சாதனையை அவர் படைத்தார். அவர் மொத்தம் 80 ‘கார்ட்வீல்ஸ்’ செய்தார்.
குறிப்பு: ‘கார்ட்வீல்ஸ்’ என்பது, கைகால்களை நீட்டி, சக்கரம் போல் தலைகீழாகச் சுழன்று, பின்பு நிமிர்ந்து நிற்கும் ஒருவகை சாகசமாகும்.
இரண்டாம் சாதனை: தலைகீழாக நிற்றல்
நாள்: 2025 நவம்பர் 1 (முதல் சாதனைக்குப் பிறகு ஒரு வாரத்திற்குள்)
விவரம்: ஆக அதிக நேரம் சுவரோடு ஒட்டி, கைகளால் தன்னைத் தாங்கித் தலைகீழாக நின்று இந்தச் சாதனையைப் படைத்தார்.
நேரம்: அவர் 1 நிமிடம் 15 வினாடிகள் தலைகீழாக நின்றார். இது முந்தைய சாதனையைவிட 6 வினாடிகள் அதிகம்.
முயற்சி திருவினையாக்கும்
ஆரியா தன் நான்கு வயதிலேயே தந்தையிடமிருந்து ‘கார்ட்வீல்ஸ்’ செய்யக் கற்றுக்கொண்டார். அன்றிலிருந்து அவர் தினமும் பயிற்சி செய்து வருகிறார்.
உடற்சாகசங்களில் (Gymnastics) மிகுந்த ஆர்வம் இருந்ததால், ஆரியா தன் பெற்றோரிடம் தன்னை முறையான பயிற்சியில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார். அதனால், தன் ஆறு வயதில் தெம்பனிசில் உள்ள உடற்சாகசப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார்.
வார இறுதிகளில்தான் வகுப்புகள் என்றாலும், ஆரியாவின் பயிற்சி வகுப்பறையோடு நின்றுவிடவில்லை. “உடற்சாகசம் மகிழ்ச்சிகரமானதாகவும், மன உளைச்சல் இல்லாததாகவும் இருக்க வேண்டும்,” என்பதே ஆரியாவின் தாயார் விதிக்கும் ஒரே விதிமுறை. உடற்சாகசங்களைத் தவிர, தன் தங்கையுடனும் அதிக நேரம் செலவிடுகிறார் ஆரியா.
எதிர்கால நம்பிக்கை
ஒன்றை விரும்பிச் செய்தால், அதை இன்றே செய்தால், நாளை வெற்றிக்கனிகளைச் சுவைக்கலாம் என்பதற்கு ஆரியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எதிர்காலத்தில் அவர் சிங்கப்பூரையே உலக மேடையில் பிரதிநிதித்துப் பதக்கங்களை வெல்லும் உடற்சாகச வீரராக முன்னேறுவார் என வாழ்த்துவோம்!
சிறுவர்களே, நீங்களும் சாதனை படைக்க வேண்டுமா? உலகச் சாதனைகளைப் பார்க்க: Kids World Records சிங்கப்பூர் சாதனைகளுக்கு: Singapore Book of Records
கின்னஸ் உலகச் சாதனைகளையும் மறந்துவிடாதீர்கள்! விண்ணை நோக்கிக் கண்ணை விரித்துப் பாருங்கள்!

