ஒவ்வொருவருக்கும் சாதிக்க வேண்டும் என்ற தீராத ஆசை இருக்கும். குறிப்பாக மாணவர்களாகிய நீங்கள் லட்சியத்தோடு செயல்படுவீர்கள்.
சிலர் கல்வி பயின்று பெற்றோர்களைப்போல் உயர்ந்த நிலை அடைய விரும்புவார்கள். சிலர் காற்பந்தாட்டம், சிலர் சதுரங்கம், சிலர் நடனம் என்று பல துறைகளில் சாதிக்க விரும்புவார்கள்.
குறிப்பாக எந்தத் துறையில் சாதிக்க விரும்பினாலும் முதலில் கல்வியை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். பிறகுதான் மற்றவை.
சாதிக்க விரும்புபவர்களுக்கு முதலில் தேவை ஆர்வம்.
ஆர்வம் இருந்தால் அதற்காக உழைக்கவேண்டும். ஆம். கடின உழைப்பு தேவை.
ஆர்வம், கடின உழைப்பு மட்டும் இருந்தால் போதுமா? நிச்சயமாக இல்லை. உங்களுக்கு அடுத்த தேவை பயிற்சி.
நீங்கள் ஒரு காற்பந்தாட்ட வீரராக வேண்டும் என்றால் பயற்சி செய்யவேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்யாமல் விட்டால் நீங்கள் உங்கள் லட்சியத்தை அடையமுடியாது.
இதற்கு எடுத்துக்காட்டாக கிரிக்கெட் வீரர் சச்சினைச் சொல்லலாம். இவர் பள்ளியில் படிக்கும்போதே கடுமையாக பயிற்சி மேற்கொண்டு சாதனை படைத்தார். அதற்குக் காரணம் அவரிடம் இருந்தது ஆர்வம், கடின உழைப்பு, பயிற்சி.
தொடர்புடைய செய்திகள்
இந்த மூன்றுடன் மிக முக்கியமான ஒன்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
உங்களிடம் ஆர்வம், கடின உழைப்பு, பயிற்சி இருந்தும் தோல்வி அடைந்தால் மனதில் சோர்வு ஏற்படும். அதற்குத்தான் இந்த நான்காவது அம்சம். ஆம். அதுதான் விடாமுயற்சி.
இந்த நான்கும் இருந்தால் கட்டாயம் வெற்றி நிச்சயம்.
விடாமுயற்சிக்கு தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி குறிப்பிடலாம். அவர் மின்சார விளக்கை கண்டுபிடிப்பதற்கு 1,000 முறை சோதனைகள் செய்தார். ஆனால், அத்தனை சோதனையிலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது.
ஆனால், அவரிடம் விடாமுயற்சி இருந்தது. “நான் 1,000 முறை என்னென்ன செய்யக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன்,” என்று கூறினார்.
அடுத்து என்ன?
உலகிற்கு மின்சார விளக்கை கண்டுபிடித்து சாதனை படைத்தார்.
அவரிடம் ஆர்வம், கடின உழைப்பு, பயிற்சி இருந்தாததால் மட்டும் சாதித்து இருக்க முடியாது. அவரிடம் விடாமுயற்சியும் இருந்தது. இறுதியாக வெற்றி பெற்றார்.
அவரை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள் சிறுவர்களே!
எனவே, எந்தத் துறையில் நீங்கள் சாதிக்க விரும்பினாலும் 1. ஆர்வம், 2. கடின உழைப்பு, 3. பயிற்சி, 4. விடாமுயற்சி ஆகியவற்றை மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் வெற்றி பெற இந்த நான்கும் இருந்தால் வெற்றி நிச்சயம் சிறுவர்களே! நீங்களும் ஒரு சாதனையாளராவீர்கள்.