குமணன் என்ற அரசருக்குத் தனது ஆசை யானையான ‘கஜா’ எவ்வளவு எடை இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசை வந்தது. அதனால் அமைச்சரை அழைத்து, “அமைச்சரே, கஜாவின் எடையை நம்மால் தெரிந்துகொள்ள முடியுமா?” என்று கேட்டார். அவ்வளவு பெரிய தராசு நம்மிடம் இல்லையே என்று அமைச்சர் குழப்பமடைந்தார்.
குழப்பத்துடன் வீட்டை அடைந்த அமைச்சரைப் பார்த்து, தன் தந்தை ஏதோ கவலையில் இருப்பதை உணர்ந்தான் அவரது மகன் அறிவன். அவரின் கவலையைக் கேட்டுத் தெரிந்துகொண்ட அறிவன், “தந்தையே! கவலைப்படாதீர்கள். என்னிடம் அதற்கான வழி இருக்கிறது,” என்று தன்னம்பிக்கையுடன் கூறினான்.
அரசர், தந்தை, யானை அனைவரையும் அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றான் அறிவன். அங்கு இருந்து ஒரு பெரிய படகில் யானையை ஏற்றினான். யானையின் எடையால் படகு தண்ணீரில் அமிழ்ந்தது.
அறிவன் அந்தப் படகு தண்ணீரில் இறங்கிய அளவை குறித்துக்கொண்டான். இவற்றையெல்லாம் அரசரும் மக்களும் பார்த்துக்கொண்டு நின்றனர். பிறகு யானையைக் கீழே இறக்கிவிடச் சொன்னான் அறிவன்.
“அரசே! நான் படகில் குறியிட்ட அளவு வரை படகு மீண்டும் தண்ணீரில் இறங்குவது வரை கற்களைக்கொண்டு நிரப்புங்கள். பின் அந்தக் கற்களை எடைபோட்டு அதில் பாகன் எடையுடன் என்னுடைய எடையைக் கழித்துப் பார்த்தால் யானையின் எடை உங்களுக்குத் தெரியும்,” என்று தனது அபாரமான அறிவாற்றலை வெளிப்படுத்தினான்.
அவனுடைய அறிவாற்றலைக் கண்டு வியந்த அரசர், உருவத்தைப் பார்த்தோ, பொருளின் அளவைப் பார்த்தோ ஒருபோதும் மலைக்கக் கூடாது; கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் சிந்தித்தாலே எவ்வளவு பெரிய சவாலையும் சுலபமாக வெல்லலாம் என்பதை அந்தச் சிறுவன் அறிவன் மூலம் உணர்ந்து, அறிவனுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்.

