நல்லிணக்கத்தை வலியுறுத்திய ‘வைஸ் ஓக்ஸ்’

நல்லிணக்கத்தை வலியுறுத்திய ‘வைஸ் ஓக்ஸ்’

2 mins read
929ce5e6-7509-43d5-8d0e-061e544f61d3
வெவ்வேறு நாடுகளின் பாரம்பரிய உடைகளை அணிந்து மேடையில் வலம்வந்த மாணவர்கள். - படம்: ரவி சிங்காரம்
Google News Preferred Icon

வெவ்வேறு கலாசாரங்களைப் பாராட்டவும் புரிந்துகொள்ளவும் மாணவர்களுக்குத் தளம் அமைத்தது, ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று வைஸ் ஓக்ஸ் அனைத்துலகப் பள்ளி ஏற்பாடுசெய்த நல்லிணக்க விழா.

அப்பள்ளியின் புதிய ஈஸ்ட் கோஸ்ட் வளாகத்தின் திறப்புவிழாவாகவும் நிகழ்ச்சி அமைந்தது.

“இவ்விழாவின் நோக்கம், ஒவ்வோர் இனத்தவரையும் மதித்து அன்பாக நடத்த மாணவர்களுக்குக் கற்பிப்பதே,” என்றார் ஈஸ்ட் கோஸ்ட் வளாகத்தின் பள்ளித் தலைவர் பாயல் ஜெய்ன்.

புதிய வளாகத்தை வைஸ் ஓக்ஸ் பள்ளி, செயிண்ட் பேட்ரிக்ஸ் பள்ளியுடன் மட்டுமன்றி, வளர்ச்சிக் குறைபாடுள்ளோருக்குச் சேவையாற்றும் மேம்ரே ஓக்ஸ் தினப் பராமரிப்பு நிலையம், ‘ஹார்ட்ஸ்@வர்க்’ ஆகிய இரு நிலையங்களுடனும் பகிர்கிறது.

அதனால், அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தை உருவாக்க மாணவர்களுக்குக் கற்பிப்பது அவசியம் என்றும் அதற்கு இவ்விழா வழிவகுக்கிறது என்றும் கூறினார் திருவாட்டி பாயல்.

மெக்சிகோ பற்றி விளக்கிய இப்ராஹிம் (இடம்), நிதிஷ் சதிஷ்.
மெக்சிகோ பற்றி விளக்கிய இப்ராஹிம் (இடம்), நிதிஷ் சதிஷ். - படம்: ரவி சிங்காரம்

கண்கவர் சாவடிகள்

சீனா, மலேசியா, பிரேசில், பிரான்ஸ், மெக்சிகோ, கொரியா, ஜப்பான் என உலகெங்கும் உள்ள நாடுகளின் சிறந்த பண்பாட்டு அம்சங்களை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். அந்தந்த நாடுகளின் பாரம்பரிய உடைகளை அணிந்து மாணவர்கள் மேடையை அலங்கரித்தனர்.

அதே சமயம், மாணவர்களின் கைவினைத் திறன்களும் கண்ணைக் கவர்ந்தன. தெர்மாகோல் மூலம் வடிவமைக்கப்பட்டிருந்த அழகான ‘மவுண்ட் ஃபூஜி’ (ஜப்பான்), ‘லீ’ ஆறு (சீனா), வண்ணத் தாள்களாலான ‘ஜெஜு’ தீவு (தென்கொரியா), ‘கியோங்போக்கங்’ மாளிகை (தென்கொரியா), போன்றவற்றைக் காணும்போது அவற்றை நேரில் சென்று பார்க்கும் ஆர்வம் பிறந்தது.

மலேசியாவின் சிறப்புகளை எடுத்துரைத்த மாணவிகள்.
மலேசியாவின் சிறப்புகளை எடுத்துரைத்த மாணவிகள். - படம்: ரவி சிங்காரம்

ஜப்பானில் இரண்டரை ஆண்டுகள் வாழ்ந்துள்ள ஆஷ்ரியா, 8,  ‘மவுண்ட் ஃபூஜி’ மாதிரியை உருவாக்கியிருந்தார். “நான் அந்த மலையில் இதுவரை ஏறியதில்லை என்றாலும் என் தந்தை மலைகள் ஏறியதுண்டு,” என்றார் அவர். இளவேனிற்காலத்தில் ஜப்பானில் சிவப்பு, வெள்ளை நிறத்தில் பூக்கும் ‘சாக்குரா பிலோசம்’ பற்றியும் அவர் கூறினார்.

“சிங்கப்பூரிலுள்ள சைனாடவுன், லிட்டில் இந்தியா போல பிரான்ஸ், பேரிசிலும் சைனாடவுன், லிட்டில் இந்தியா உள்ளன!” என வியப்பூட்டினர் சகோதரர்கள் திப்ரோ, ஒடோரா. உலக அதிசயங்களில் ஒன்றான மெக்சிகோவின் ‘சீச்சன் இட்ஸா’வின் சிறப்புகளை விளக்கினர் நிதிஷ் சதிஷ், இப்ராஹிம்.

‘நல்லிணக்கம்’ எனும் கருப்பொருளில் நடந்த ஓவியப் போட்டி, புகைப்படப் போட்டி, இரண்டிலும் வென்றார் மணிகண்டன் தீர்த்தா, 8. “என் வீட்டின் அருகே மரத்தடியிலிருந்து நான் இலைகள் சேகரித்துவந்தேன்,” என்றார் தீர்த்தா. தன் தாயாரின் உதவியுடன் அந்த இலைகளில் வண்ணந்தீட்டி அவற்றைத் தேசியக் கொடிகளாக அவர் மாற்றினார். 

பல இனத்தவரும் வசிக்கும் நாடாகவும் அனைத்துலக நாடுகளுடன் முக்கிய அரசதந்திர உறவுகளைக் கொண்டாடும் நாடாகவும் திகழும் சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தின் இன்றியமையாயைப் பற்றி விழா பறைசாற்றியது.

குறிப்புச் சொற்கள்
நல்லிணக்கம்பள்ளிசிங்கப்பூர்