உலகின் மிக வேகமான ரயில்: ஓர் அதிசயப் பயணம்!

2 mins read
c66b2149-75cf-4b6b-a4cc-92b4494991c7
400 மீட்​டர் நீள​மும் 1 டன் எடையும் கொண்ட ‘மாக்லேவ்’ ரயில் இரண்டு விநாடிகளில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்​தது. - படம்: சிஎன்என்

சிறகுகளே இல்லாமல் பறப்பது போல ஒரு ரயிலைக் கற்பனை செய்து பாருங்கள்! அதுதான் உலகின் மிக வேகமான ரயில். அதன் பெயர் ‘மாக்லேவ்’ (Maglev).

மாக்லேவ் (Maglev) என்றால் என்ன?

‘மாக்லேவ்’ என்பது ‘மேக்னடிக் லெவிடேஷன்’ (Magnetic Levitation) என்பதன் சுருக்கம். அதாவது ‘காந்த மிதவை’ என்று பொருள். கேட்கவே ஏதோ மந்திரச் சொல் போல இருக்கிறது அல்லவா?

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘மேக்​னெடிக் லெவிடேஷன்’ எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 400 மீட்​டர் நீள​மும் 1 டன் எடையும் கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்​தினர். இதில் வெறும் 2 விநாடிகளில் அந்த ரயில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்​தது.

நம் ஊரில் பார்க்கும் ரயில்கள் அல்லது கார்களைப்போல இதற்குச் சக்கரங்கள் கிடையாது. அதற்குப் பதிலாக, சக்தி வாய்ந்த காந்தங்களைப் பயன்படுத்தித் தண்டவாளத்திற்குச் சற்று மேலே இது அந்தரத்தில் மிதக்கும்! தண்டவாளத்தைத் தொடாததால், இது குலுங்காமல் வழுக்கிக்கொண்டு செல்லும்.

இது எவ்வளவு வேகம் தெரியுமா?

இந்த ஷாங்காய் மாக்லேவ் ரயில் மணிக்கு 431 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது விமானம் தரையில் இருந்து மேலே எழும்பும்போது இருக்கும் வேகத்தை விட அதிகம்!

நீங்கள் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பார்த்தால், வெளியே இருக்கும் வீடுகள், மரங்கள், சாலைகள் எல்லாம் வண்ணக் கோடுகள் போல வேகமாக மறைந்துவிடும். வாகனத்தில் சென்றால் ஒரு மணி நேரம் ஆகும் பயணத்தை, இந்த ரயில் வெறும் 7 நிமிடங்களில் கடந்துவிடும்! நேரம் கூட உங்களைப் பிடிக்க முடியாமல் துரத்தி வருவது போல இருக்கும்.

அமைதியான பயணம்

இந்த ரயிலின் சிறப்பம்சமே, இது சத்தமில்லாமல் அமைதியாகச் செல்வதுதான். தண்டவாளத்தைத் தொடாமல் காற்றில் மிதப்பதால், உராய்வு சத்தம் இருக்காது. ஒரு ‘சூப்பர் ஹீரோ’ காற்றில் பறப்பது போல இது சறுக்கிக்கொண்டு செல்லும்.

இது பாதுகாப்பாகவும் வலிமையாகவும் இருக்கப் பொறியாளர்களும் விஞ்ஞானிகளும் பத்து ஆண்டுகளாக உழைத்துள்ளனர். கணினிகள் இதன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதால், இது ஒருபோதும் நிலைதடுமாறாது.

அறிவியல் பாடம்

இந்த அதிவேக ரயில் நமக்கு ஒரு முக்கியமான அறிவியல் பாடத்தையும் சொல்லித்தருகிறது. அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் நாம் சரியாகப் பயன்படுத்தினால் நேரத்தை மிச்சப்படுத்தலாம், சுற்றுச்சூழலையும் காக்கலாம். வாகனங்களைப்போல இந்த ரயில் புகையை வெளியிடாது, அதனால் காற்று தூய்மையாக இருக்கும்.

வருங்காலத்தில் சிங்கப்பூரில் இதுபோன்ற ரயில்கள் வரலாம்! அதுவரை, ‘அறிவியலைக் கற்போம், பெரிதாகக் கனவு காண்போம், உலகம் மிக வேகமாக முன்னேறும் என்று நம்புவோம்,’ என்பதை இந்த ரயில் நமக்கு நினைவூட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்