மெர்லயனும் ‘டிராகன்’ விளையாட்டுத் திடலுமே சிங்கப்பூரை எங்களுக்கு இல்லமாக உணர வைக்கிறது. ஆகையால் அவற்றைக் கொண்டே எங்கள் சின்னத்தை நாங்கள் உருவாக்கினோம். ‘மெர்லயன்’ எங்களுடைய வலிமைக்கும் விடாமுயற்சிக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. விளையாட்டுத் திடல் எங்களுடைய குழந்தைப் பருவத்தின் இன்பமான நினைவுகளைக் குறிக்கிறது. எங்களுடைய படைப்பு அனைவரையும் நம்முடைய வேர்களைப் போற்றவும் வலுவான எதிர்காலத்தை ஒன்றாய்ச் செதுக்கவும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம். இனிய 61வது பிறந்தநாள் சிங்கப்பூர்!
அனிஷ் ஐயர், 13, விக்டோரியா பள்ளி
எனது படைப்பில், பல்வேறு நிறங்களைச் சேர்ந்த மனிதர்கள் இணைந்து ‘61’ என்ற எண்ணை அமைக்கின்றனர். சிங்கப்பூரின் பன்முகத்தன்மையை வெவ்வேறு வண்ண மனிதர்களைக் கொண்டு நான் வெளிப்படுத்தி இருப்பதோடு இங்கு அனைவரும் வரவேற்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் குறிப்பால் உணர்த்தியுள்ளேன். அவர்கள் அனைவரும் இணைந்து நட்சத்திரங்களை நோக்கி கைகளை நீட்டுவது, ஒத்த கனவு, ஒற்றுமை, முன்னேற்றம் ஆகியவற்றின் குறியீடாக அமைகிறது. சிங்கப்பூரின் பல்லின, பண்பாட்டு உணர்வால் ஈர்க்கப்பட்ட இந்த ஓவியம், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும்போது நம்பிக்கை, துணிச்சல், கருணையுடன் ஒன்றிணைந்து முன்னேற முடியும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
ஜியஸ்ரீ சரவணன், Age 13, சிஎச்ஐஜே செயின்ட் ஜோசப் கான்வென்ட்
பல்வேறு இனங்களையும் பண்பாடுகளையும் சேர்ந்த மக்கள் ஒற்றுமையோடு கூடி வாழும் நாடாகச் சிங்கப்பூர் திகழ்ந்து வருகிறது. அதுவே என்னை இந்தப் படைப்பை உருவாக்கத் தூண்டியது. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொன்றும் நம்பிக்கை, ஒற்றுமை, பெருமை ஆகியவற்றை நமக்கு நினைவூட்டுகிறது. மேலும், நாம் ஒற்றுமையுடன் இருந்தால் நம் தாய்நாட்டிற்கு வலுவான ஓர் எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதையும் காட்டுகிறது.
என்னுடைய படைப்பு சிங்கப்பூர் ஒற்றுமை, பசுமை, தொழில்நுட்பம் ஆகியவற்றின்வழி முன்னேறுவதை எடுத்துக்காட்டுகிறது. பெருவிரைவு ரயில் பாதைகள், வீடுகள், மின்னிலக்க வடிவங்கள் ஆகியவை, மக்களும், இடங்களும், எண்ணங்களும் இணைந்திருப்பதைக் காட்டுகின்றன. இளஞ்சிங்கப்பூரர்களாக நாங்கள் பெரிய கனவுகளைக் காண்பதும் ஒருவர்மீது ஒருவர் அன்பு செலுத்துவதும் சிங்கப்பூர் ஒற்றுமைமிக்க நாடாக வளர உதவும்.


