உலக உள்ளரங்கு கிரிக்கெட் சம்மேளனம் இவ்வாண்டு ஏற்பாடு செய்துள்ள இளையர் உலகப் போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த 10 விளையாட்டாளர்கள் களமிறங்கவுள்ளனர். 10 வயதிற்கும் 14 வயதிற்கும் உட்பட்ட அவ்விளையாட்டாளர்கள் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் செப்டம்பர் 26ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 3ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் போட்டியில் வெவ்வேறு உலக நாடுகளுடன் மோதுவர். சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம் தேர்வு செய்துள்ள பத்து விளையாட்டாளர்களும் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் போட்டிக்குத் தயாராகப் பயிற்சி பெற்று வந்தனர். குழுவின் தலைவரான 11 வயது அவ்யான் கொடவையூர் தமக்கு இவ்வாய்ப்பு கிடைத்துள்ளதை எண்ணி பெருமை கொள்கிறார். “சிங்கப்பூரை உலக மேடையில் பிரதிநிதிக்கவுள்ளது உற்சாகமளிக்கிறது. போட்டியில் ஆஸ்திரேலியா போன்ற வலுமிக்க குழுக்களைச் சந்திக்கவுள்ளது சிறந்த சவாலாக அமையும் என எண்ணுகிறேன்,” என்றார் அவர். வலுமிக்கக் குழுக்களைச் சந்திக்கவிருந்தாலும், தாங்கள் போட்டிக்குத் தயாராக இருப்பதாக உணர்கிறார் அதேய்யா தேனரசன். “போட்டியில் எந்தக் குழுவைச் சந்திப்பதாக இருந்தாலும், பயமின்றி தன்னம்பிக்கையுடன் விளையாடுவோம். ஏனெனில், கடந்த சில மாதங்களாகக் கடுமையாகப் பயிற்சி செய்து வந்துள்ளோம்,” என்று அவர் கூறினார். வெளிப்புற கிரிக்கெட், திறன்களை வளர்த்துக்கொள்ள தமக்கு உதவிகரமாக இருந்துள்ளது என ஆங்கர் கிரீன் தொடக்கப்பள்ளி மாணவர் கெளதம் தர்மேஷ் கூறினார். “உள்ளரங்கு கிரிக்கெட் மிகவும் வேகமாக நகரக்கூடிய விளையாட்டு. ஒரு வினாடி கவனம் தப்பினாலும் ஆட்டத்தின் நிலையே மாறிவிடக்கூடிய வாய்ப்புள்ளது. அந்த அம்சம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது,” என்றார் அவர். கெளதம் அவரது பள்ளிப் பணிகளையும் விளையாட்டுப் பயிற்சிகளையும் சமாளிக்க அவரது தாயார், பிரேமா சுகுமாரன், முக்கிய பக்கபலமாக இருந்து வருகிறார். “இந்த இளம் வயதில் அவர்கள் அனைவருக்கும் சிங்கப்பூருக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது பெருமைக்குரியது. அவர்களது உழைப்பிற்குப் பெற்றோர்கள் அனைவரும் தக்க ஆதரவை வழங்கி வருகின்றனர்,” என்றார் அவர். இச்சிறார்களுக்கு இப்போட்டி நிச்சயம் புதுமையான, சிறப்பான அனுபவமாக அமையுமென குழுவின் மேலாளர் தங்கராஜ் முத்து எண்ணுகிறார். உள்ளரங்கு கிரிக்கெட்டைப் புதிதாகக் கற்றுள்ள இந்த விளையாட்டாளர்கள் தங்கள் திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்துவர் என்றும் அவர் நம்புகிறார்.
உலக உள்ளரங்கு கிரிக்கெட் போட்டியில் சிங்கப்பூர் சிறுவர்கள்
2 mins read
உலக உள்ளரங்கு கிரிக்கெட் இளையர் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து விளையாடவுள்ள சிறார்களும் குழுவின் பயிற்றுவிப்பாளர் முரளியும். - படம்: சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம்
Youth representing Singapore in indoor cricket
Ten Singaporean players, aged 10-14, will compete in the Junior World Series organised by the World Indoor Cricket Federation in Pretoria, South Africa, from September 26 to October 3. Selected by the Singapore Cricket Association, they have trained rigorously. Captain Avyaan Koduvayur (11) is proud to represent Singapore and eager to face strong teams. Teammate Atheiyaah Thaenarasan feels ready, while Gautham Darmesh notes indoor cricket helps develop his outdoor skills. Parents, like Prema Sugumaran, offer significant support. Team Manager Thangaraj Muthu believes it will be a special experience for these young players.
Generated by AIகுறிப்புச் சொற்கள்

