நீட் தேர்வை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில் மருத்துவர்கள் அமைப்பு மனு

நீட் தேர்வை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில் மருத்துவர்கள் அமைப்பு மனு

2 mins read
52c3b21c-700b-4638-acfb-e234832a0d28
தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் தேசியத் தேர்வு முகமையை உடனடியாக கலைக்க வேண்டும் அல்லது மறுசீரமைக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்துள்ளது. - படம்: தி இந்து

புதுடெல்லி: மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய மருத்துவச் சங்கங்களின் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

கூட்டமைப்பு சார்பில் தன்வி துபே என்ற வழக்கறிஞர் இதற்கான மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மேலும், ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி என்ற அமைப்பின் தலைவரான லக்சய மிட்டல் என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

கோடிக்கணக்கான மாணவர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு முதன்மைத் தேர்வு முகமை, 1860ஆம் ஆண்டின் சங்கங்கள் பதிவு சட்டத்தின்கீழ், தன்னாட்சி பெற்ற ஒரு தன்னார்வலத் தொண்டு நிறுவனம் போன்ற கட்டமைப்பில் இயங்குவது அநீதியானது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் திரு மிட்டல்.

தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் தேசிய தேர்வு முகமையை உடனடியாக கலைக்க வேண்டும் அல்லது மறுசீரமைக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

மருத்துவ நுழைவுத் தேர்வில் தொடரும் முறைகேடுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய, சமத்துவ உரிமை, வாழ்வாதாரத்திற்கான உரிமை ஆகியவற்றை நேரடியாக பறிப்பதுபோல் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அண்மையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் 23 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பை ஏற்காத, ஒரு சங்கப் பதிவு மாதிரியின்கீழ் இயங்கும் அமைப்பு மூலம், தேர்வை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது எனும் வாதத்தை திரு மிட்டல் தாக்கல் செய்த மனு முன்வைத்துள்ளது.

தேசியத் தேர்வு முகமையை உடனடியாகக் கலைக்க வேண்டும், நாடாளுமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் புதிய சட்டபூர்வ தகுதிகொண்ட தேசியத் தேர்வு வாரியத்தை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதும் திரு மிட்டலின் கோரிக்கையாக உள்ளது.

புதிதாக அமைக்கப்படும் தேர்வு நடத்தும் அமைப்பானது, மத்திய கணக்கு தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்பட்டதாகவும் பலத்த இணைய பாதுகாப்பு அம்சங்கள், வினாத்தாள் கசிவுத் தடுப்புப் பிரிவுகளைக் கொண்டதாகவும் இயங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திரு லக்சய மிட்டல், எதிர்காலத்தில் நடக்கும் தேசிய அளவிலான தேர்வுகள் தங்குதடையின்றி நூறு விழுக்காடு நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதற்கு ஏதுவாக, உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் தற்காலிகக் குழுவை அமைக்க வேண்டும் என அவரது மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்பது பேர் கைது

இதனிடையே, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இதுவரை ஒன்பது பேர் கைதாகியுள்ளனர். இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்