புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பம் அளிப்போர் தங்களுடைய கடவுச்சீட்டுகளின் தற்போதைய நிலை குறித்து அறிவிக்க வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் அதை ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியபோதும் அதை அமல்படுத்துவதில் இந்திய அரசு முனைப்பாக உள்ளது.
இந்நிலையில், குடியுரிமை கோரும் விண்ணப்பதாரர்கள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளின் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான கடவுச்சீட்டை வைத்துள்ளனரா என்பதை அறிவிக்கும் உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை இந்திய உள்துறை அமைச்சு திங்கட்கிழமை (மே 18) வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக அங்கு முதன்முறையாக ஆட்சி அமைத்தது. எனினும், அடுத்த சில நாள்களிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் ‘சிஏஏ’ சட்டத்தின்கீழ் பேரளவில் பயனடையக்கூடியவர்கள் என மதுவா சமூகத்தினர் பெருமளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அண்டை நாடான பங்ளாதேஷில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள்.
எனினும், இவர்களுடன் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்ததற்கான போதிய ஆவணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின்கீழ் இந்தியாவின் மூன்று அண்டை நாடுகளில் ஏதேனும் ஒன்றால் வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டை வைத்துள்ளனரா என்பதை விண்ணப்பதாரர்கள் உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
மேலும், இந்தியக் குடியுரிமைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 15 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர், அதை இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சு கூறியுள்ளது.


