சரியும் ரூபாய் மதிப்பு: இந்தியாவிலிருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்

சரியும் ரூபாய் மதிப்பு: இந்தியாவிலிருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்

2 mins read
6b57fefc-fa61-4a0c-8209-d048b99a03a4
கடந்த மூன்றாண்டுகளில் முதல் முறையாக உலகின் ஐந்து மிகப்பெரிய பங்குச் சந்தைகளின் பட்டியலிலிருந்து இந்தியா வெளியேறும் அபாயத்தில் உள்ளது. - சித்திரிப்புப் படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: உலகளாவிய முதலீட்டாளர்கள் பலர் இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளை திரும்பப் பெற்று வருவதால், கடந்த மூன்றாண்டுகளில் முதல் முறையாக உலகின் ஐந்து மிகப்பெரிய பங்குச் சந்தைகளின் பட்டியலிலிருந்து இந்தியா வெளியேறும் அபாயத்தில் உள்ளது.

இதனிடையே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவைச் சந்தித்துள்ளது.

மே 18ஆம் தேதி காலை இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.20 என்ற வரலாற்றுச் சரிவைச் சந்தித்தது. இந்தியச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றமே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

இந்தியாவிலிருந்து திரும்பப் பெறப்படும் முதலீடுகளை உலகளாவிய முதலீட்டாளர்கள் பலர், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புடன் தொடர்புடைய ஆசிய சந்தைகளுக்குத் திருப்பிவிடுவது தெரியவந்துள்ளது.

நடப்பு 2026ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் இருந்து நிகரமாக 21 பில்லியன் டாலரைத் திரும்பப் பெற்றுள்ளதாக பொருளியல் நிறுவனங்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆக மோசமான நிலைமையாகும்.

கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக உள்நாட்டு நிறுவனங்களைவிட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பின்தங்கியுள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் மதிப்பிட்டுள்ளது.

வளர்ந்து வரும் சந்தைகள் குறியீட்டில் இந்தியாவின் பங்களிப்பு, ஓராண்டுக்கு முன்பு 19 விழுக்காடாக இருந்தது. அது தற்போது சுமார் 12 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

நடப்பு மே மாதத்தில் இதுவரை இந்திய பங்குச் சந்தையில் இருந்து சுமார் ரூ.27,000 கோடி வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் வெளியேறி உள்ளன. இந்த ஆண்டில் இதுவரை ரூ.2.2 லட்சம் கோடி வெளியேறி உள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் வெளியேறிய வெளிநாட்டு நிறுவன முதலீடு ரூ.1.66 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதத்துக்குள்ளாகவே பழைய மைல்கல்லை இந்தியா விஞ்சிவிட்டது.

கச்சா எண்ணெய் விலையின் அதிரடி உயர்வும் ரூபாய் சரிவுக்கு முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 111 அமெரிக்க டாலரை தாண்டிவிட்டது. இதனால், இந்தியாவின் இறக்குமதிச் செலவு அதிகரித்து, பணவீக்கம் குறித்த அச்சங்களைத் தூண்டுகிறது.

வளர்ந்து வரும் சந்தைகளில் செயற்கை நுண்ணறிவு மீதான ஈடுபாடு மூலதன ஒதுக்கீட்டை இயக்குவது தெளிவாகத் தெரிகிறது.

இது தொடர்பாக ஏற்பட்டுள்ள ஒருவித கட்டமைப்பு மாற்றத்தை சந்தை நிலவரங்கள் பிரதிபலிப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்