ராஜ்தானி விரைவு ரயிலில் பரவிய தீ: 68 பயணிகள் உயிர் தப்பினர்

ராஜ்தானி விரைவு ரயிலில் பரவிய தீ: 68 பயணிகள் உயிர் தப்பினர்

2 mins read
20993ea9-03da-47d0-8a49-3075c71b1eee
ராஜ்தானி விரைவு ரயில் (எண்: 12431) தனது நீண்ட பயணத்தில் ஏறக்குறைய 2,500 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, டெல்லியை அடைய இன்னும் 650 கிலோமீட்டர் தொலைவே இருந்த நிலையில் இந்த தீ விபத்து நேர்ந்துள்ளது. - படம்: என்டிடிவி.காம்

புதுடெல்லி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த ராஜ்தானி விரைவு ரயிலில் திடீரென பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. எனினும், ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் எவ்விதக் காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) அதிகாலை 5:15 மணியளவில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, 68 பயணிகள் இருந்த பி1 குளிர்சாதனப் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.

இந்த தீ மளமளவெனப் பரவி, அந்தப் பெட்டிக்குப் பின்னால் இருந்த காவலர், லக்கேஜ் பெட்டியையும் சூழ்ந்து தீக்கிரையாக்கியது.

வானுயர எழுந்த கரும்புகையும் ரயில் பெட்டிகளில் எழுந்த தீயின் தாக்கமும் தண்டவாளத்தின் அருகில் இருந்த மரங்களுக்கும் பரவியது. இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் காணொளியாக எடுத்துப் பதிவிட்டுள்ளனர்.

பாதுகாப்புக் கருதி ரயிலின் மேல்நிலை மின்சார விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தீப் பிடித்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு, ரயிலின் மற்ற பெட்டிகளில் தற்காலிகமாக அமர வைக்கப்பட்டனர்.

“தீப்பிடித்த இரண்டு பெட்டிகளும் ரயிலில் இருந்து கழற்றப்பட்ட பின், காலை 9:45 மணியளவில் ரயில் மீண்டும் டெல்லி நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தது,” என்று மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

இந்தத் தீ விபத்து காரணமாக அந்த முக்கிய வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அவத், துரந்தோ விரைவு ரயில்கள் உட்பட 18 முக்கிய ரயில்கள் ஆங்காங்கே வெவ்வேறு நிலையங்களில் அவசரமாக நிறுத்தி வைக்கப்பட்டதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

குறிப்புச் சொற்கள்