சென்னை: வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள சிலர் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக 25 வெளிநாட்டுக் குடிமக்களை தமிழக காவல்துறை கைது செய்துள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த சட்டவிரோத வாக்களிப்பு தொடர்பாக சென்னை, மதுரை விமான நிலையங்களில் குடிநுழைவு அதிகாரிகள் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருந்தவர்களைக் கண்காணித்தனர். அப்போது 25 பேரிடம் வாக்களித்ததற்காக ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் மை, இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து, சட்டவிரோதமாக வாக்களித்ததற்காக இங்கிலாந்து, கனடா, இந்தோனீசியாவைச் சேர்ந்த அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தியக் குடியுரிமையை இழந்த பின்னரும் அவர்கள் எவ்வாறு வாக்காளர் பட்டியலில் நீடித்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
போலி அடையாள அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை அவர்களால் எப்படி எளிதாகப் பெற முடிந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை, தற்போது தேர்தல் ஆணையத்துக்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளது.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையின்போது லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இந்நிலையில், வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து அங்கு நிரந்தர வாசத்துக்கான அனுமதி, குடியுரிமை பெற்றவர்கள் தமிழகத் தேர்தலில் எவ்வாறு வாக்களித்தனர் என்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதன் மூலம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போது 25 பேர் கைதாகியுள்ள நிலையில், எத்தனை பேர் இவ்வாறு வாக்களித்துள்ளனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
தமிழகத் தேர்தலில் ஒரேயோர் வாக்கு வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் தோல்வி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

