முறைகேடு புகார்: மேற்கு வங்கத்தில் 1.6 கோடி சாதிச் சான்றிதழ்கள் மறுஆய்வு

முறைகேடு புகார்: மேற்கு வங்கத்தில் 1.6 கோடி சாதிச் சான்றிதழ்கள் மறுஆய்வு

2 mins read
504f1274-db34-4823-8f3e-a7450e2ed9d4
கோல்கத்தாவில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 17) ஏராளமான ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: தி இந்து

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நீடித்துவந்த திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் லட்சக்கணக்கான சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, ஏறக்குறைய 1.6 கோடி சான்றிதழ்களை மறுஆய்வு செய்ய அங்கு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மேற்கு வங்க மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2011 முதல் இதுவரை மாநிலம் முழுதும் 1.69 கோடி சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுள் பட்டியலினச் சான்றிதழ்கள் மட்டும் ஒரு கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பழங்குடியினருக்கு 21 லட்சம் சான்றிதழ்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 48 லட்சம் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட பல சாதிச் சான்றிதழ்கள் போலியானவை என்று புகார் எழுந்துள்ளதையடுத்து, கடந்த 2011 முதல் வழங்கப்பட்ட அனைத்து சாதிச் சான்றிதழ்களும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அச்சான்றிதழ்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மறுஆய்வு செய்யப்படும். ஏதேனும் முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சான்றிதழ் மறுசரிபார்ப்பு பணியில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும் என்றும் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதனிடையே, கோல்கத்தாவில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 17) ஏராளமான ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காவல்துறை மேற்கொண்ட ஆய்வின்போது அங்கு குவிந்த அக்கட்சித் தொண்டர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. பறிமுதல் செய்யப்பட்ட ஆதார் அட்டைகள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு உரியவை என்று திரிணாமூல் காங்கிரஸ் விளக்கம் அளித்த நிலையில், விசாரணைக்குப் பின்னர் அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்