புதுடெல்லி: தலைநகர் டெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மிக முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
டெல்லியின் ஒட்டுமொத்த காற்று மாசுபாட்டுக்கும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையே முதன்மைக் காரணமாக விளங்குவதால், தூய்மையைப் பேணும் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இனி மின்சார ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்று வாரியம் அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இந்தப் புதிய விதிமுறையானது வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் டெல்லியில் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்களின் வசதிக்காக இத்திட்டம் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படாமல், மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சார ஆட்டோக்கள் பயன்பாட்டைத் தீவிரப்படுத்துவதுடன், தற்போதைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையைக் கட்டுப்படுத்த மற்றொரு புதிய விதிமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டெல்லி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில், முறையான புகைச் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எவ்வித முறைகேடும் இன்றி துல்லியமாகக் கண்காணிக்கும் பொருட்டு, அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இந்த கேமராக்கள் வாகனங்களின் எண் பலகைகளை ‘ஸ்கேன்’ செய்து, இணையத் தரவுத்தளம் வழியாக அவற்றின் புகைச் சான்றிதழ் காலாவதியாகாமல் இருப்பதை உறுதி செய்த பின்னரே எரிபொருள் நிரப்ப அனுமதிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அரசின் இந்த இரட்டை அதிரடி நடவடிக்கைகள் மூலம் டெல்லியில் வாகனப் புகை கணிசமாகக் குறைவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பானதாக மாறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

