புதுடெல்லி: இந்தியாவில் ஒரே வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு ஏறக்குறைய மூன்று ரூபாய் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையானது, தற்போது 90 காசு அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் இந்த நடவடிக்கை, மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, உலகளாவிய அளவில் எரிபொருள், எரிவாயு விநியோகம் பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்ளாதேஷ் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. எனினும் அசாம், தமிழ்நாடு, புதுவை, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் உடனடியாக விலை உயர்வு அறிவிக்கப்படும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிவந்தன.
இதற்கேற்ப, கடந்த 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றத்தால் உலக அளவில் எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துவருவதும் எரிபொருள், எரிவாயு இறக்குமதிச் செலவை அதிகரிக்கச் செய்துள்ளது.
இரண்டாவது முறையாக விலை உயர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.77-ல் இருந்து ரூ.98.64 என உயர்ந்துள்ளது. அங்கு டீசல் விலை ரூ.90.67ல் இருந்து ரூ.91.58 என விலை உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சென்னையில் பெட்ரோல் விலை 82 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.104.49 என விற்பனையாகிறது. டீசல் விலை 86 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.96.11 என விற்பனையாகிறது. இந்திய அரசு விலையைக் குறைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

