S$352 மி. சமரசம்: அதானிமீதான இன்னோர் அமெரிக்க வழக்கும் ரத்து

S$352 மி. சமரசம்: அதானிமீதான இன்னோர் அமெரிக்க வழக்கும் ரத்து

2 mins read
1cfcc5da-ee59-45f0-8dfa-7540063cedc0
கௌதம் அதானி. - படம்: ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்

வாஷிங்டன்: இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானிக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஒன்று தனக்கு எதிரான வழக்கிற்காக US$275 மில்லியன் (S$352 மில்லியன்) செலுத்த முன்வந்துள்ளது.

ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பொருளியல் தடைகளை மீறியதாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருந்த அந்த வழக்கை முடித்து வைப்பதாக அமெரிக்க நீதித்துறை திங்கட்கிழமை (மே 18) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

வழக்கில் அந்த நிறுவனத்துடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கக் கருவூலத் துறையின் ‘வெளிநாட்டுச் சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம்’ தெரிவித்துள்ளது.

விசாரணைக்கு விரிவான ஒத்துழைப்பை வழங்கியதால் அதானி குழுமம் மீதான வழக்கைக் கைவிட முடிவு செய்துள்ளதாக அது அறிவித்தது. 

அதனைத் தொடர்ந்து நீதித்துறையின் அறிக்கை வெளியானது.

“ஈரான் மீது வெளிநாட்டுச் சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் விதித்திருந்த பொருளியல் தடைகளை 32 முறை மீறியதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை முடித்துக்கொள்ள அதானி எண்டர்பிரைசஸ் ஒப்புக்கொண்டுள்ளது,” என்று அதன் அறிக்கை தெரிவித்தது.

கடந்த 2023 நவம்பருக்கும் 2025 ஜூனுக்கும் இடைப்பட்ட காலங்களில் திரவ பெட்ரோலிய எரிவாயு தொடர்பான கொள்முதல் தடைகளை மீறியதாக அந்த நிறுவனம் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வாரம் ஏற்கெனவே அதானிக்குச் சொந்தமான மற்றொரு வழக்கை அமெரிக்க நீதித்துறை முடித்து வைத்தது.

‘அதானி கிரீன் எனெர்ஜி’ என்னும் தமது நிறுவனம் பற்றிப் பொய்யான, தவறான தகவல்களைக் கொடுத்ததாக அமெரிக்காவின் பங்குச்சந்தைப் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்இசி) தொடுத்திருந்த வழக்கை முடித்துவைக்கத் திரு அதானியும் அவரது உறவினர் சாகரும் இணங்கியதைத் தொடர்ந்து நீதித்துறை அதற்கு ஏற்பாடு செய்தது.

அந்த லஞ்ச ஊழல் வழக்கை முடித்து வைப்பதற்காக US$18 மில்லியன் (S$23 மில்லியன்) செலுத்த அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் கடந்த வியாழக்கிழமை (மே 14) அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஓர் உடன்பாட்டு ஆவணம் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்
அதானிவழக்குநீதித்துறை