குடியுரிமை கொடுப்பதற்கே புதிய சட்டம், பறிப்பதற்கல்ல

குடியுரிமை கொடுப்பதற்கே புதிய சட்டம், பறிப்பதற்கல்ல

2 mins read
f6b46b24-665b-4d25-bd77-3bd98fc6657a
சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் கூட்டுப் பிரார்த்தனையில் பிரதமர் கலந்துகொண்டார். ராமகிருஷ்ணரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் மடத்தின் துறவிகளையும் ஜீயர்களையும் சந்தித்துப் பேசினார். விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் அவர் பங்கெடுத்தார். படம்: இந்திய ஊடகம் -

கோல்கத்தா: இந்தியாவில் நடப்புக்கு வந்துள்ள புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், மக்களுக்கு குடியுரிமையைக் கொடுக்கும் சட்டமே தவிர அந்த உரிமையைப் பறிக்கும் சட்டம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.

மேற்கு வங்காளத் தலைநகர் கோல்கத்தாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், இரண்டாவது நாளான நேற்று, ராமகிருஷ்ண மிஷன் தலைமையகத்தில் மாணவர்களிடையே பேசினார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தேவையில்லை என்று கோரி அந்தச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

"எவ்வளவு விளக்கங்கள் அளித்தபோதிலும் எதிர்க்கட்சியினர் சுயநலத்துடன் மக்களைத் திசை திருப்புகிறார்கள். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் கொடுமைகள் பற்றி இப்போது உலகத்திற்குத் தெரியவந்து இருக்கிறது.

"கடந்த 70 ஆண்டு காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகிஸ்தான் செய்த கொடுமைகளுக்கு எல்லாம் அது பதில் கூற வேண்டும்," என்றார் பிரதமர்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா சனிக்கிழமையன்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். பணிவன்பு நிமித்தம் அந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மீட்டுக்கொள்ளும்படி மம்தா பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில், அந்தச் சட்டம் குறித்து விவாதிக்க புதுடெல்லி வரும்படி மம்தாவுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இதனிடையே, கோல்கத்தா துறைமுகத்தின் 150 ஆண்டுகால கொண்டாட்ட நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்த பிரதமர், கோல்கத்தா துறைமுகத்துக்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

முன்னதாக சனிக்கிழமை சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் கூட்டுப் பிரார்த்தனையில் பிரதமர் கலந்துகொண்டார். ராமகிருஷ்ணரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். துறவிகளையும் ஜீயர்களையும் சந்தித்துப் பேசினார். விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் அவர் பங்கெடுத்தார்.

கோல்கத்தாவில் 1833ல் கட்டப்பட்ட கரன்ஸி கட்டடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் சனிக்கிழமை உரையாற்றிய மோடி, இந்திய வரலாற்று ஆசிரியர்கள் ஏராளமான முக்கிய அம்சங்களைப் புறக்கணித்துவிட்டதாகக் கவலை தெரிவித்தார்.