புதுடெல்லி: இந்தியா செயல்படுத்தி வரும் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ‘கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம்’ சீனாவுக்கு வருங்காலத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, மலாக்கா நீரிணைப் பாதையில் இந்தியா ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளதால் அந்நாட்டின் தென்கோடி முனையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவின் இந்த ராணுவ, வணிக உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பான நடவடிக்கையானது, இந்தோ-பசிபிக் வட்டார புவிசார் அரசியல், பாதுகாப்பு சமன்பாடுகளை மாற்றி அமைக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் எனத் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மலாக்கா நீரிணை வழியாகச் செல்லும் சீன வணிக, எரிசக்தி கப்பல்களைக் கண்காணிக்கும் இந்தியாவின் முக்கியக் கண்காணிப்பு மையமாக நிக்கோபார் தீவு உருவெடுக்கலாம் என்பது சீனாவுக்கு புதுத் தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாகக் கருதப்படுகிறது.
உலகளாவிய வர்த்தகத்தில் ஏறக்குறைய 3.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்கள் மலாக்கா நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன. இது சீனாவின் கடல்வழிப் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகம்.
உலகின் மிக நெரிசலான, குறுகலான கடற்பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். மலாக்கா நீரிணை வழியேதான் சீனாவின் கச்சா எண்ணெய் தொடர்பான 80 விழுக்காடு வணிகம் நடைபெறுகிறது.
எனவே, ஏதேனும் ஒரு மோதல் சூழல் உருவாகும்போது, மலாக்கா நீரிணை முடக்கப்பட்டால் சீனாவுக்கு ஆகப்பெரிய அளவில் உத்திபூர்வ பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மலாக்கா நீரிணையின் வடக்கு நுழைவாயிலுக்கு அருகே இந்தியாவின் தென்கோடி முனையாக நிக்கோபார் தீவு அமைந்துள்ளது. இது சீனாவின் பெரும்பான்மையான கடல்வழி வர்த்தகம் கடந்து செல்லும் ‘சிக்ஸ் டிகிரி சேனல்’ பகுதியை நோக்கியவாறு அமைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சீனாவுக்குக் குடைச்சல் தரும் கிரேட் நிக்கோபார் திட்டத்தை கடந்த 2021ல் தொடங்கியது இந்தியா.
தற்போது நிக்கோபார் தீவுப் பகுதியில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து மையம், அனைத்துலக விமான நிலையம், நகர உள்கட்டமைப்புகள், சூரிய மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
கிரேட் நிக்கோபாரில் அதிகரிக்கும் இந்திய ராணுவத்தின் திறன்கள்தான் சீனாவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
சீனக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் திறன் கொண்ட ஒரு முக்கிய கடற்படை மையமாக நிக்கோபார் தீவு மாறக்கூடும். அந்தமான் நிக்கோபார் தீவுகள் முழுவதும் இந்தியா தனது கட்டமைப்புகளை விரிவுபடுத்தி வருவதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தென்படுகின்றன.
இதையடுத்து வணிக மற்றும் எரிசக்தி தேவைகளுக்காக மலாக்கா நீரிணைக்கு மாற்றான பாதைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் சீனா கவனம் செலுத்தி வருகிறது.

