யானைச் சண்டையில் சிக்கிய பெண் உடல் நசுங்கி மரணம்

யானைச் சண்டையில் சிக்கிய பெண் உடல் நசுங்கி மரணம்

1 mins read
352ded1c-a8d9-498e-b3a0-1f31ff5f88f1
காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது இரண்டு யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. - படம்: இந்தியா டுடே

குடகு: கர்நாடக மாநிலத்தில் உள்ள யானை முகாமில் நிலைகுலைந்து விழுந்த யானையின் அடியில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

குடகு மாவட்டத்திலுள்ள துபாரே யானைகள் முகாமில் அந்தச் சம்பவம் திங்கட்கிழமை (மே 18) நிகழ்ந்தது.

குடியிருப்பு வட்டாரங்களில் அட்டகாசம் செய்யும் யானைகள் பிடிக்கப்பட்டு, அந்த முகாமில் கும்கி யானைகளாகப் பயிற்சி அளிக்கப்படுகின்றன. தற்போது அங்கு 27 யானைகள் உள்ளன.

திங்கட்கிழமை காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது காஞ்சன், மார்த்தாண்டா என்னும் இரண்டு யானைகள் திடீரென்று மோதிக்கொண்டு ஒன்றை ஒன்று தாக்கத் தொடங்கின. யானைப் பாகன்கள் அந்த மோதலைத் தடுக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

அப்போது, யானைகளின் சாகசத்தைக் கண்டுகளிக்க அந்த முகாமிற்குத் தமது குடும்பத்தினருடன் சென்றிருந்த துளசி என்னும் 33 வயதுப் பெண் மீது, மார்த்தாண்டா யானை நிலைதடுமாறி சாய்ந்தது.

அந்த யானையின் அடியில் சிக்கிய துளசி சம்பவ இடத்திலேயே நசுங்கி மாண்டதாக அறிவிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரான துளசி தமது கணவர் மற்றும் குழந்தைகளுடன், குளிர்ப் பிரதேசமான குடகிற்குச் சுற்றுலா சென்றிருந்த வேளையில் அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

காவிரிக் கரையோரம் உள்ள துபாரே யானை முகாமில் யானைகள் சாப்பிடுவதையும் குளிப்பதையும் சுற்றுப் பயணிகள் கண்டுகளிப்பர்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்துள்ளார். உயிரிழந்த துளசியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்