26 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பரில் ‘ஸ்னோ சிட்டி’ மூடப்படும்

26 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பரில் ‘ஸ்னோ சிட்டி’ மூடப்படும்

2 mins read
இறுதி நாள் செப்டம்பர் 30
846ba71c-f6be-4f9c-8401-dcbead0a229e
இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வருகையாளர்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்குப் பல சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும். - படம்: ஸ்னோ சிட்டி ஃபேஸ்புக்

சிங்கப்பூரின் முதல் உள்ளரங்கப் பனிவிளையாட்டு நிலையமான ஸ்னோ சிட்டி, 26 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 30ஆம் தேதி அதன் கதவுகளை நிரந்தரமாக மூடவுள்ளது.

மாறிவரும் வருகையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, நவீனப் பொழுதுபோக்குத் துறைக்கு ஈடாக புதிய அம்சங்களை வழங்கும் நோக்கத்துடன் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சிங்கப்பூர் அறிவியல் நிலையம் (எஸ்எஸ்சி) செவ்வாய்க்கிழமை (மே 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சிங்கப்பூர் அறிவியல் நிலைய நிர்வாக வாரியத்தின் (எஸ்சிபி) கடப்பாட்டுக்கு உகந்த வகையில் எதிர்காலக் கல்வித் திட்டங்களுக்கும் இலக்குகளுக்கும் ஏற்ப அந்தச் செயல்பாடுகள் அமைந்துள்ளதாகவும் நிலையம் குறிப்பிட்டது.

ஸ்னோ சிட்டியின் ஊழியர்களுக்கு அந்தக் காலகட்டத்தில் அணுக்கமான ஆதரவு வழங்கப்படும் என்பதையும் அறிவியல் நிலையம் உறுதிப்படுத்தியது. அவர்களில் எட்டு முழுநேர ஊழியர்களுக்கு நிர்வாக வாரியத்தில் மாற்று வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அது கூறியது.

“சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் ஊழியர்களுக்கான வழிகாட்டுதலின்படி, வேறு இடங்களில் வேலை வாய்ப்புகள் நாடுவோருக்கு உதவியும் ஆதரவும் வழங்கப்படும்,” என்றும் அறிவியல் நிலையம் தெரிவித்தது.

வர்த்தகத் தொடர்பில் உள்ள அனைத்து நிறுவனங்களுடனும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி ஸ்னோ சிட்டி அதன் கடமைகளை நிறைவேற்றும் எனவும் அது வலியுறுத்தியது.

பிரியாவிடை நிகழ்ச்சி

ஜூரோங் ஈஸ்ட்டில் அமைந்துள்ள அந்த உள்ளரங்கம், இறுதியாகப் பொதுமக்களுக்கென ‘ஒன் லாஸ்ட் ஸ்னோ ஃபால்’ என்ற பிரியாவிடை நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்யவுள்ளது.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வருகையார்களுக்குக் குறிப்பிட்ட காலத்துக்குப் பல சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும்.

வழக்கமாகப் பெரியோருக்கு $27, சிறுவருக்கு $23 என்று வகுக்கப்பட்ட பல விளையாட்டுகளுக்கான கட்டணத் தொகுப்பு, அந்தக் காலத்தில் முறையே $19, $16 எனக் குறைக்கப்படும்.

சமூக ஊடகங்களிலும் ஸ்னோ சிட்டி, சிங்கப்பூர் அறிவியல் நிலைய இணையப் பக்கங்களிலும் மேல் விவரங்கள் விரைவில் பகிரப்படும்.

குறிப்புச் சொற்கள்