செயல்பாட்டை நிறுத்திய கார் விற்பனை நிறுவனம்; வாங்கிய காரை இழந்த ஆடவர்

செயல்பாட்டை நிறுத்திய கார் விற்பனை நிறுவனம்; வாங்கிய காரை இழந்த ஆடவர்

2 mins read
87896a20-889d-4a02-8eea-240a164ec2bf
செயல்பாடுகளை நிறுத்தி சொத்துகளை விற்ற ஜிவி ஆட்டோமொபில் சென்டர். - படம்: கூகல் வரைபடம்

சிங்கப்பூரில், கார் விற்பனை நிறுவனம் ஒன்று செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதை அடுத்து பல பயன் சொகுசு கார் ஒன்றை வாங்கிய ஆடவர் கடும் நட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

கார்களை விற்பனை செய்யும் ‘ஜிவி ஆட்டோமொபில் சென்டர்’ நிறுவனத்திடமிருந்து 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 42 வயது வாங் பிங்சின், டொயோட்டா வெல்ஃபாயர் என்ற பல பயன் சொகுசு காரை $140,800க்கு வாங்கினார்.

காரின் சட்டபூர்வ உரிமை ஒருசில நாள்களில் திரு வாங்கின் பெயருக்கு மாற்றப்படும் என்று நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், அவ்வாறு நடைபெறுவதற்குமுன் செயல்பாட்டை நிறுத்திய ‘ஜிவி’ நிறுவனம், சொத்துகளை விற்பதாகத் தெரிவித்தது.

‘ஜிவி’ நிறுவனத்துக்கு நிதி வழங்கிய கென்சோ லீசிங் நிதி நிறுவனம், திரு வாங்கிடம் விற்கப்பட்ட டொயோட்டா காரை 2024ஆம் ஆண்டு அக்டோபர் 14 பறிமுதல் செய்தது.

காருக்கான முழுத் தொகையையும் கட்டிவிட்டதால் கார் தமக்குத்தான் சொந்தம் என்ற திரு வாங், கென்சோ நிறுவனம்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

கென்சோ நிறுவனத்தின் சார்பில்தான் ‘ஜிவி’ நிறுவனம் காரைத் தம்மிடம் விற்றதாகத் திரு வாங் குறிப்பிட்டார்.

ஆனால் ஏப்ரல் 6ஆம் தேதி, ‘ஜிவி’ நிறுவனம் கென்சோ நிறுவனத்தின் சார்பில் செயல்படவில்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

அத்துடன், காரின் உரிமையாளர், ‘ஜிவி’ நிறுவனம் அல்ல என்றும் வேறொரு நிறுவனம் என்றும் கார் தொடர்பான நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஆவணங்கள் மூலம் திரு வாங்கிற்குத் தெரிந்திருக்கவேண்டும் என்றார் நீதிபதி.

திரு வாங் முழுத் தொகையையும் செலுத்திய டொயோட்டா காரை மட்டும் இழக்காமல் கென்சோ நிறுவனத்துக்கு எதிரான வழக்குக்குக் கூடுதலாக $100,000 செலுத்தினார்.

கார் விற்பனை செய்யும் நிறுவனங்களின் வார்த்தையை அப்படியே நம்பக்கூடாது என்றும் காருக்கான உரிமை காரை வாங்கியவரின் பெயருக்கு உடனடியாக மாற்றப்படுவதை உறுதிசெய்வது மிகவும் முக்கியம் என்றும் இந்தச் சம்பவம் மூலம் அறிந்துகொண்டதாகத் திரு வாங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்