சிங்கப்பூரில் கடந்த முப்பது ஆண்டுகளாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பேரளவு அதிகரித்திருந்தாலும், ஆரம்பக்கட்டத்திலேயே நோயின் தாக்கத்தைக் கண்டறிதல், மேம்பட்ட சிகிச்சை ஆகியவற்றால் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாகப் புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
இருப்பினும், அனைத்துலக நோய் சுமை அறிக்கையின்படி, வரும் காலங்களில் உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 1990ஆம் ஆண்டில் 100,000 பெண்களில் 41 பேருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும் அந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு 62 ஆக உயர்ந்ததாக மார்ச் 2ஆம் தேதி வெளியான ‘தி லான்செட் ஆன்காலஜி’ (The Lancet Oncology) இதழில் வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன.
அதே காலகட்டத்தில், மார்பகப் புற்றுநோயால் மாண்டோரின் எண்ணிக்கை 100,000 பெண்களுக்கு 23.4 விழுக்காட்டிலிருந்து 12.47ஆக குறைந்தது.
இது உலகளாவிய சராசரியான 16.14ஐ விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேம்பட்ட சிகிச்சை முறைகளாலும் ஆரம்பக்கட்டத்திலேயே நோயைக் கண்டறிவதாலும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரான இணைப் பேராசிரியர் மேரி இங் தெரிவித்துள்ளார். அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்.
சிங்கப்பூர் புற்றுநோய் பதிவேட்டின்படி, “தற்போது சிங்கப்பூரில் மார்பகப் புற்றுநோய் பாதிப்புகளில் 57 விழுக்காட்டிற்கும் அதிகமானவை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. அந்நிலையில் நோயைக் கண்டறிந்தால், நோயாளிகள் குணமடைவதற்கான வாய்ப்பு ஆக அதிகமாக இருக்கும்,” என அவர் குறிப்பிட்டார்.
மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதே மார்பகப் புற்றுநோய் பாதிப்புகள் உயர்வதற்கு ஓர் காரணம் என்கிறார் பேராசிரியர் மேரி.
மேலும், நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற நோய்கள் அதிகரித்து வருவதும், இந்த நோய்ப்பரவல் திடீரென உயர மற்றொரு காரணமாக இருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மற்ற நாடுகளைப் போலவே, சிங்கப்பூரிலும் பெண்கள் தாமதமாகக் கருவுறுதல், குறைவான எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது போன்றவையும் மார்பகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

