நிதர்சன உலகை மறக்கவைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கற்பனைகளையும் பிணைத்து ஒரு புதிய பரிமாணத்திற்கு வாசகர்களைக் கொண்டுசெல்கின்றன அறிவியல் புனைகதைகள்.
வாசிப்புப் பழக்கத்தைச் சிங்கப்பூரர்களுக்கிடையில் வளர்க்கும் வகையிலும் அறிவியல் புனைகதைகள்வழி மக்களை ஈர்க்கும் வகையிலும் தேசிய நூலக வாரியம் புனைகதைகளுக்காகவே புதிய தற்காலிக நூலகம் ஒன்றைத் திறந்துள்ளது.
பார்க்வே பரேட்டில் மே 14ஆம் தேதி திறக்கப்பட்ட அந்தத் தற்காலிக நூலகம், அடுத்த ஆண்டு (2027) ஏப்ரல்வரை அறிவியல் புனைவு நூல்களை வழங்கிவரும்.
அந்த நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி ஒன்றில், புத்தகங்கள் மட்டுமின்றி அப்புத்தகங்களில் இடம்பெறும் அறிவியல் புனைக்கதைகள் சார்ந்த கலைப்பொருள்களும் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்களில் எழுத்து வடிவில் இடம்பெறும் கற்பனைகளை உயிர்ப்பித்துக் காட்டும் வகையில் அமைகிறது அக்கண்காட்சி.
அறிவியல் புனைகதைகளுக்கு வயதில்லை என்பதை அந்நூலகம் வெளிப்படுத்துகிறது. அது குழந்தைகள் முதல் இளையர்கள் வரை அனைவரும் விரும்பும் அறிவியல் புனைகதைகளை ஒரே இடத்தில் தொகுத்து வழங்குகிறது.
கிட்டத்தட்ட 4,000 அறிவியல் புனைகதைகளை அந்நூலகத்தில் காணலாம். புத்தகங்கள், வரைகதைகள் என்று பல வடிவங்களில் இடம்பெறும் அந்த அறிவியல் புனைகதைகளை அங்குப் பெற்றுக்கொள்ளலாம்.
பிறருடைய கற்பனைக் கதைகளை வாசிப்பது மட்டுமின்றி, நம் கற்பனை அறிவில் புனைகதைகளை உருவாக்கி அவற்றை மின்நூலாகக் காணும் வாய்ப்பையும் அந்நூலகத்தில் பெறலாம். பிரபலக் கதைகளில் நம் கற்பனையையும் புகுத்தி, அறிவியல் புனைவுகளைப் பிணைத்துச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்வழி ஒரு புதிய பரிமாணத்தில் அவற்றைக் கண்டு மகிழலாம்.
உள்ளூரிலும் அறிவியல் புனைகதைகளை இயற்றும் எழுத்தாளர்கள் உள்ளனர் என்பதை வெளிக்காட்டியது அந்நூலகம். சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் ஒரு தனிப் பிரிவு வகுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அறிவியல் புனைகதைகள் முதன்முதலில் சிங்கப்பூரில் எப்போது அறிமுகம் கண்டன என்பது பற்றியும் அந்த நூலகத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இந்நிலையில், “மக்கள் கடைத்தொகுதிகள் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் இடங்களில் ஒரு தற்காலிக நூலகத்தை அமைப்பதன்வழி, அவர்களைச் சுவாரசியமான வகையில் நூல்களை வாசிக்க ஊக்குவிக்கலாம்,” என்றார் தேசிய நூலக வாரியத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் மேலாளரான திருவாட்டி லாவண்யா கிருஷ்ணமூர்த்தி.

