அழுதுகொண்டே இருந்ததால் காரின் இருக்கையிலிருந்து இரண்டு மாதங்களே ஆன கைக்குழந்தையைத் தூக்கிய சில நிமிடங்களில் அந்த கார் இன்னொரு காருடன் மோதியது.
அக்குழந்தை பெண்ணின் கைகளிலேயே இருந்தபோதும் விபத்தால் அதன் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதனால், அக்குழந்தைக்கு நரம்பு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.
2025ஆம் ஆண்டில் அவ்விபத்து நேர்ந்தது. இன்னும் குழந்தை கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் நரம்பு மறுசீரமைப்புச் சிகிச்சை பெற்றுவருவதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ ஊடகம் கூறியது.
அச்சம்பவம் ஒரு குழந்தையை அதன் பராமரிப்பாளர் தன் கைகளில் வைத்திருந்தாலும் விபத்தின்போது ஏற்படும் கடுமையான காயங்களிலிருந்து அதனைப் பாதுகாக்க முடியாது என்பதைக் காட்டுகிறது என்று கேகே மருத்துமனையின் மூத்த மருத்துவ ஆலோசகர் ரோனல்ட் டான் குறிப்பிட்டார்.
சாலை விபத்தில் சிக்கிக் காயமடைந்த வகையில், ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 400 குழந்தைகள் கேகே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அத்தகைய விபத்துகளின்போது அந்தக் குழந்தைகளுக்கு எந்த வகையான பாதுகாப்பு அம்சங்களும் துணையாக இல்லை என்பது தெரியவந்ததாக டாக்டர் டான் சுட்டினார்.
இதனையடுத்து, அவரது தலைமையிலான கேகே மருத்துவமனையின் காயத் தடுப்புப் பணிக்குழு, குழந்தை கார் இருக்கை வகுப்பையும் பிறந்த குழந்தைகளுக்கான கார் இருக்கைத் திட்டத்தையும் அங்குத் தொடங்கியது.
சிறிது தொலைவே சென்றாலும்கூட, ஒவ்வொரு பயணத்தின்போதும் குழந்தைகளுக்குக் கட்டாயம் இருக்கைவார் அணிவிக்க வேண்டும் என்று டாக்டர் டான் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“அந்த ஒரு சிறிய செயல், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோர் எடுக்கும் ஆற்றல்மிக்க நடவடிக்கை. அது வாழ்விற்கும் இறப்பிற்குமான வேறுபாட்டைத் தீர்மானிப்பதாக அமையக்கூடும்,” என்றார் அவர்.
2015க்கும் 2024க்கும் இடையில் வாகன விபத்தில் சிக்கிய ஒன்பது வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 80 விழுக்காட்டினர் கார் இருக்கைகளைப் பயன்படுத்தவில்லை என்று தேசிய அளவிலான தரவுகள் தெரிவிக்கின்றன.
1.35 மீட்டருக்கும் குறைந்த உயரமுள்ள குழந்தைகள் வாகனங்களில் பயணம் செய்யும்போது பாதுகாப்பான முறையில் அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்பது சட்டம். சாலைகளில் கையைக் காட்டி நிறுத்தி ஏறும் டாக்சிகளுக்கு மட்டும் இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்களுக்குத் தண்டப் புள்ளிகளும் $150 அபராதமும் விதிக்கப்படக்கூடும். குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு $1,000 வரை அபராதமும் மூன்று மாதம் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.

