சிங்கப்பூர், செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகளைச் சோதனை செய்யும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவிருக்கிறது.
ஆசியாவில் அத்தகைய திட்டம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதன்முறை என்று கருதப்படுகிறது.
‘ஏஐ’ வெரிஃபை ஃபெளண்டேஷன்’ என்ற லாப நோக்கமற்ற அமைப்பால் உருவாக்கப்படும் ‘ஏஐ’ சோதனை அங்கீகாரத் திட்டம் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு அம்சங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு அந்தத் திட்டம் பெரிய அளவில் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு அம்சங்களைச் செயல்படுத்தும்முன் அதைச் சோதனை செய்து அதில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய சோதனையாளர்களைப் பணியமர்த்த முற்படும் நிறுவனங்கள் ஏஐ’ சோதனை அங்கீகாரத் திட்டத்தின் மூலம் பயனடையும்.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ திங்கட்கிழமை (மே 18), செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்புத் தொடர்பான அனைத்துலக அறிவியல் பரிமாற்றத்தில் திட்டம் குறித்து அறிவித்தார்.
சுகாதாரப் பராமரிப்பு, நிதி, பொதுச் சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகளை மதிப்பிடுவதற்கான சோதனை நிறுவனங்களை உருவாக்க புதிய திட்டம் கைகொடுக்கும் என்று ‘ஏஐ வெரிஃபை ஃபெளண்டேஷன்’ அமைப்பு சுட்டியது.
வர்த்தகங்கள் அவற்றின் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகள் நம்பிக்கைக்குரியவை என்பதை உறுதிசெய்யவேண்டும் என்ற அமைப்பு, தகுதியான செயற்கை நுண்ணறிவுச் சோதனை நிறுவனம் இல்லாததால் அத்தகைய நிறுவனங்களை அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது என்றது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு நடுவமாக உருமாற முற்படுகிறது என்ற அமைச்சர் டியோ, அதற்கேற்ற நம்பிக்கையான சூழலை உருவாக்க முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டார்.
முறையான பாதுகாப்புடன் பொறுப்பான முறையில் செயற்கை நுண்ணறிவு செயல்படுத்தப்படுவதில் சிங்கப்பூர் கவனம் செலுத்துகிறது என்றார் திருவாட்டி டியோ.
செயற்கை நுண்ணறிவு சேட்போட், பல்வேறு தளங்களில் உள்ள தகவல் கண்டுபிடிப்பு அம்சங்களைத் தாண்டி துரிமாக வளர்ச்சியடைந்துள்ளது என்றார் அவர்.
சிங்கப்பூரைப் பொருத்தவரை, சுகாதாரப் பராமரிப்பு, நிதி, போக்குவரத்து, பொதுச் சேவைகள், கல்வி, இணையப் பாதுகாப்பு, முக்கிய உள்கட்டமைப்பு என மக்களின் வாழ்க்கையில் நேரடியாகத் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அங்கங்களில் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகள் பயன்படுத்துவதைத் திருவாட்டி டியோ சுட்டினார்.
பொறுப்பான வகையில் செயற்கை நுண்ணறிவு சோதனை செய்யப்படுவதையும் வெளிப்படையுடன் இருப்பதையும் ஊக்குவிக்க ‘ஏஐ’ அங்கீகாரத் திட்டம் போன்றவை அறிமுகம் செய்யப்படுவதாகத் திருவாட்டி டியோ சொன்னார்.
மூன்றாம் தரப்பு செயற்கை நுண்ணறிவுச் சோதனை நிறுவனங்களுக்குப் புதிய திட்டத்தின் மூலம் அங்கீகாரம் வழங்கும்போது அவற்றை அறிமுகம் செய்யும் நிறுவனங்களுக்கும் கூடுதல் நம்பிக்கை இருக்கும் என்று திருவாட்டி டியோ கூறினார்.

