பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ‘ஏஐ’ நிதியியல் பயிற்சி வழங்க புதிய திட்டம்

பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ‘ஏஐ’ நிதியியல் பயிற்சி வழங்க புதிய திட்டம்

2 mins read
eea7d62a-f453-40ec-9c8c-0cfd8b674f56
புதிய பயிற்சித் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நாணய ஆணையமும் வங்கியியல் மற்றும் நிதியியல் கல்விக் கழகமும் இணைந்து இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் புதிய பயிற்சித் திட்டத்தை செவ்வாய்க்கிழமை (மே 19) தொடங்கின.

வகுப்பறைக்கு அப்பால் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த விரும்பும் மாணவர்கள் நேரடி நிதித் திட்டங்களில் வேலைப் பயிற்சி செய்வதற்கான அந்த மூன்று மாதத் திட்டம் சிங்கப்பூரின் இருபது நிதியியல் நிறுவனங்களை உள்ளடக்கியது.

அந்த ‘நிதியியலில் செயற்கை நுண்ணறிவுக்கான இளந்திறனாளர் திட்டம்’ அடுத்த ஓராண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சிகள் மற்றும் பயிற்சிப் பணியிடங்களை வழங்கும்.

நிதித்துறையில் திறனாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த சிங்கப்பூர் நாணய ஆணையமும் வங்கியியல் மற்றும் நிதியியல் கல்விக் கழகமும் இணைந்து மேற்கொண்டு வரும் பரந்துபட்ட முயற்சிகளின் ஒரு பகுதியே இத்திட்டம்.

திட்டத்தின் தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய துணைப் பிரதமர் கான் கிம் யோங், நிறுவனங்கள் செயல்படும் விதத்தையும் வேலைகளின் போக்கையும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் நிதித்துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 14 விழுக்காட்டுப் பங்களிப்பை வகிக்கிறது. அத்துடன், கிட்டத்தட்ட 200,000 நிபுணர்களுக்கு அத்துறை வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. அவர்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் உள்ளூர்வாசிகள்.

அந்தத் துறையில் உள்ள நல்ல வேலைகளில் பல பகுப்பாய்வு, சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், இடர் மேலாண்மை, வாடிக்கையாளர் நிர்வாகம் போன்றவற்றில் இருப்பதாகக் கூறினார் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான்.

மேலும், “புதிய வாய்ப்புகள் உருவாகும்போது, ​​அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அந்த வாய்ப்புகளுக்குப் பொருத்தமான திறன்களைப் பெறவும் துறைசார் அனுபவம் பெறவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் சிங்கப்பூர் உதவும்,” என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்