சிங்கப்பூரில் இயங்கும் வணிகங்கள், நிதி ஆலோசனைச் சேவைகளைப் பெற இனி ஒரே இடத்திற்குச் சென்றால் போதும்.
நிறுவனங்களின் வளர்ச்சிக்கான மூலதனத்தைத் திரட்ட நிதி ஆதரவு தருவோரைக் கண்டறியவும் அவை அங்குச் செல்லலாம். திங்கட்கிழமை (மே 18) தொடங்கப்பட்டுள்ள நிறுவன நிதி ஆலோசனை நிலையம் அத்தகைய வணிகங்களுக்குக் கைகொடுக்கும்.
புதிய நிலையம் பற்றி முதன்முதலில் கடந்த ஆண்டு (2025) ஜூலையில் அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சி அது.
நிறுவனங்கள் அவற்றின் நிதி நிலைமையை மதிப்பிட நிலையத்தில் உள்ள ஆலோசகர்கள் உதவுவர். பணப் புழக்கத்தைச் சீராக வைத்திருத்தல், நிதி நிலை அறிக்கையைத் தயாரித்தல், இடர்களை நிர்வகித்தல் போன்ற அம்சங்களிலும் அவர்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வர்.
அதன் பின்னர், நிறுவனங்கள் அவற்றின் அடிப்படைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் லோ யென் லிங் கூறினார்.
“சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களே பொருளியலின் முதுகெலும்பு. அவை வளர்ச்சியை ஊக்குவித்து, சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்கித் தருகின்றன,” என்றார் அவர்.
வர்த்தகச் சம்மேளனத்தின் தேசிய வணிகக் கருத்தாய்வு 2025ன்படி, சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டுக்குக் கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
“வெளிநாடுகளில் வர்த்தக விரிவாக்கம், புதிய பொருள்கள், சேவை, புத்தாக்கம் முதலியவற்றுக்காகக் கூடுதல் நிதி தேடப்படுகிறது,” என்று வர்த்தகச் சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோக் பிங் சூன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நிதி உதவிகளைப் பெறுவதற்கான தெரிவுகளை விரிவுபடுத்துவதிலும் புதிய நிலையம் கைகொடுக்கும். பாரம்பரிய வங்கிக் கடன்களைத் தவிர்த்து, தனியார் கடன், சொத்து அடிப்படையிலான கடன் போன்றவையும் அவற்றுள் அடங்கும்.
ஒவ்வொன்றும் மாறுபட்ட வளர்ச்சி நிலைகளையும் வர்த்தகத் தேவைகளையும் பொறுத்து அமையும். அந்தத் தெரிவுகள் குறித்தும் அவற்றில் உள்ள சாதக பாதகங்கள் பற்றியும் நிறுவனங்கள் புரிந்துகொள்ளப் புதிய நிலையம் உதவும்.
“மூலதனம் கிடைப்பது மட்டும் அன்று. கட்டுப்பாடு, இடர், நீண்டகால விளைவுகள் மீதான தாக்கமும் அவற்றுள் அடங்கும். நிறுவனங்களின் வளர்ச்சித் தேவைக்கான ஆகச் சிறந்த ஆதரவைத் தரும் நிதி உதவியைப் பெற நிறுவனங்களுக்கு உதவுவதே இலக்கு,” என்றார் திருவாட்டி லோ.
சிங்கப்பூர் நிறுவனங்கள், நிதி நிலவரம் குறித்து மேலும் விழிப்புடன் இருக்கப் புதிய நிலையம் முயற்சி மேற்கொள்ளும். அதற்காக நிபுணத்துவச் சேவை நிறுவனங்கள், வர்த்தகச் சங்கங்கள், தொழிற்சபைகள் முதலியவற்றுடன் அது இணைந்து செயல்படவுள்ளது. நிறுவனங்கள், அவற்றின் வர்த்தக உத்திகளுக்கு ஏற்ப நிதி சார்ந்த முடிவுகளைத் தெளிவாக எடுக்க அது துணைபுரியும்.

