சிங்கப்பூரில் நாட்பட்ட நோய்க்கான சிகிச்சை, தடுப்பு சுகாதாரப் பராமரிப்புக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குடும்ப மருத்துவர்கள் தங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலதுறை மருந்தகங்களிலிருந்து சமூக மருந்தகங்களுக்கு மருத்துவப் பராமரிப்புப் பணிகள் மாற்றப்பட்டு வருவதால், இந்தத் தேவை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமைகளைக் குறைப்பதற்காக அரசாங்க மானியங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், தங்களால் நிலைமையைச் சமாளிக்க இயலவில்லை எனச் சிறிய மருந்தகங்கள் எச்சரித்துள்ளன.
‘கிரிஃபோன் பேமிலி’ மருந்தகத்தில், கடந்த சில மாதங்களாக நோய் தடுப்புப் பரிசோதனைகளும் நாட்பட்ட நோய்க்கான சிகிச்சைகளும் அதிகரித்துள்ளன. அங்குப் பணியாற்றும் மருத்துவர், இத்தேவை வரும் நாள்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும் என எண்ணுகிறார்.
பிடோக்கில் உள்ள மருந்தகம் ஒன்றில், தடுப்பூசி போடுதல் போன்ற நோய் தடுப்புச் சேவைகளை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. அத்துடன் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
சமூக சுகாதார உதவித் திட்டம் (சாஸ்), நாட்பட்ட நோய் மேலாண்மைத் திட்டம் ஆகியவற்றின்கீழ், மேலும் பல நாட்பட்ட நோய்களுக்கு மானியங்கள் கிடைக்கவுள்ளதால், பணிச்சுமை அதிகரிக்கும் என்று மருத்துவர் மார்க் கூ கூறினார்.
உதாரணமாக, அடுத்த ஆண்டு முதல் தைராய்டு (thyroid) தொடர்பான பிரச்சினைகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன என ‘சிஎன்ஏ’ செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.
“மக்கள்தொகையில் மூப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குடும்ப மருத்துவர்களால் கையாளப்படும் நோய்களின் எண்ணிக்கை உயர்கிறது. இதனால், நாட்பட்ட நோய் சம்பவங்களும் அது தொடர்பான பணிகளும் கண்டிப்பாக அதிகரிக்கும்,” என மருத்துவர் கூ குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தங்கள் மருந்தகத்தில் வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறிய மருத்துவர் கூ, மருத்துவ நிபுணர்களின் சமூக ஆதரவையே தாம் நம்பியிருப்பதாகக் குறிப்பிட்டார். பொதுவாக 10 அல்லது அதற்கும் மேற்பட்ட குடும்ப மருந்தகங்களைக் கொண்ட அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பு மூலம் இந்த ஆதரவு பெறப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் மருத்துவர்கள், தாதியர், அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் அடங்கிய பன்னோக்குக் குழுவின் மூலம் நோயாளிகள் கவனிப்பைப் பெற முடியும். இது நாட்பட்ட நோய்களைச் சிறந்த முறையில் நிர்வகிக்க உதவுகிறது.


