தாவரங்கள் ஒளிச்சேர்க்கைமூலம் ஒளியாற்றலைச் சர்க்கரை வடிவில் வேதியாற்றலாக மாற்றுகின்றன.
அதே ஒளிச்சேர்க்கை முறையைப் பயன்படுத்தி, உலர்விழி நோய்க்குச் (dry eye) சிகிச்சை அளிக்கும் முயற்சிகளில் சிங்கப்பூர் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உலர்விழி நோயால் உலகளவில் 1.5 பில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது விழிவெண்படலத்தில் வடு, நாட்பட்ட வலி, ஒளியைக் கண்டால் கண் கூசுவது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
விழிவெண்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால் உயிரணுக்களைச் சிதைக்கவல்ல ‘வினைத்திறன்மிக்க உயிர்வளிக் கூறுகள்’ உருவாவதே உலர்விழி நோய்க்குக் காரணம்.
நலமிக்க கண்களில் இயற்கையாகவே சுரக்கும் ‘என்ஏடிபிஎச்’ எனும் வேதிப்பொருள் உலர்விழிப் பிரச்சினையைத் தடுக்கவல்லது.
தாவர உயிரணுக்கள் ஒளியாற்றலை ஈர்த்து, அதனை ‘என்ஏடிபிஎச்’ மூலக்கூறுகளாக மாற்றுகின்றன. அவை ஒளிச்சேர்க்கையின்போது சர்க்கரையை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அதன்மூலம் தாவரங்களுக்கு ஆற்றலும் உணவும் கிடைக்கின்றன.
அதுபோல, கடல் நத்தை போன்ற சில விலங்குகளும் ஒளிச்சேர்க்கைமூலம் ஊட்டச்சத்துகளை உற்பத்தி செய்துகொள்கின்றன.
இந்நிலையில், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) இணைப் பேராசிரியர் டேவிட் லியோங் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு, ஒளிச்சேர்க்கையை விழிவெண்படல உயிரணுக்களுக்குள் புகுத்தியுள்ளனர். அந்த உயிரணுக்கள் சுற்றுப்புற ஒளியை ஈர்த்து, தாமாகவே ‘என்ஏடிபிஎச்’சை உற்பத்தி செய்ய வைப்பதே அதன் நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
தாவரங்களின் இலைகளைப் போலவே மனித விழிகளும் கண்ணுக்குத் தெரியும் ஒளியை ஈர்ப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் பசலைக் கீரையிலிருந்து ‘தைலகாய்ட் கிரானா’ எனும் மீநுண்துகள்களைப் (nano particles) பிரித்து, அதற்கு ‘லீஃப்’ எனப் பெயரிட்டனர்.
வெறும் 400 நேனோமீட்டர் அளவே உள்ள அத்துகள்கள், உயிரணுக்களுக்குள் புகுந்ததும் சுற்றுப்புற ஒளியின் துணையுடன் ‘என்ஏடிபிஎச்’ மூலக்கூறுகளை உற்பத்தி செய்கின்றன. அவை உயிரணுக்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உலர்விழி நோய்க்கெதிராகச் செயல்படுகின்றன.
ஒளியைப் பாய்ச்சிய அரைமணி நேரத்திற்குள் விழிவெண்படலத்தின் நோய் எதிர்ப்பு உயிரணுக்களை வீக்கமற்ற நிலைக்குக் கொண்டுவர முடிந்ததை ஆய்வகச் சோதனை முடிவுகள் காட்டின.
இந்த ஆய்வு முடிவுகள் மே 15ஆம் தேதி வெளியான ‘செல்’ சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளன.
“இது மிகுந்த ஊக்கந்தரும் கண்டுபிடிப்பு. இந்தத் தொழில்நுட்பமானது மருத்துவத் துறையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வலுவான சாத்தியத்தைக் கொண்டுள்ளது,” என்று பேராசிரியர் லியோங் கூறினார்.
விழித்திரை, தோல் மற்றும் அதன்கீழுள்ள எலும்புக்கூட்டுத் தசைகள் என உடலின் மற்ற பகுதிகளிலும் ‘லீஃப்’ துகள்களைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

