தடுப்பூசி போட தயங்காதீர்!

தடுப்பூசி போட தயங்காதீர்!

7 mins read
8254229e-7013-4db4-92ac-a437bf7849aa
இப்போது நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்தோர் கொவிட்-19 தடுப்பூசிக்குப் பதிவுசெய்து வருவதாகச் சொல்லப்படுகிறது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

சிங்கப்பூரில் 70 வயதும் அதற்கும் மேற்பட்டோரில் இதுவரை 76 விழுக்காட்டினர் கொவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டு விட்டனர். அவ்வயதுப் பிரிவினரில் இன்னும் 96,000க்கும் மேற்பட்டோர் தடுப்பூசிக்குப் பதிவு செய்யவில்லை என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கடந்த திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். கிருமித்தொற்றால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் முதியோர், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத் தயங்குவது ஏன் என்பது குறித்து அறிந்தும் ஆராய்ந்தும் வந்தது தமிழ் முரசு.

எஸ்.வெங்கடேஷ்வரன்

கண­வர், மகள், தாயார், சகோ­தரி என்று தம் குடும்­பத்­தில் பல­ரும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­போ­தும் இன்­னும் தடுப்­பூசி போடா­மல் இருக்­கி­றார் திரு­வாட்டி மேனகா கோபால், 62.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தால் யாரும் இறக்­க­வில்லை என்­றா­லும் உல­கின் மற்ற பகு­தி­களில் சிலர் தடுப்­பூசி போட்ட பின்­னர் கடு­மை­யான உடல்­ந­லக் கோளா­று­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் என்று அச்­சத்­து­டன் குறிப்­பிட்­டார் திரு­வாட்டி மேனகா.

"இணை­யத்­தில் நிறைய செய்­தி­க­ளைப் படிப்­பேன். தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பின்­னர் சில­ருக்கு மார­டைப்பு, பக்­க­வா­தம் போன்ற கடு­மை­யான பாதிப்­பு­கள் ஏற்­பட்­ட­தா­கப் படித்­தேன். அவை என்­னைப் பல­முறை சிந்­திக்க வைத்­துள்­ளன. தடுப்­பூசி போடவே மாட்­டேன் என்று சொல்­ல­வில்லை. ஆனால், சிறிது காலம் காத்­தி­ருக்­க­லாம் என்று தோன்­று­கிறது," என்­றார் அவர்.

சமூக ஊட­கங்­களில் நண்­பர்­கள் பேசிக்­கொள்­வ­தும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

"தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தால் 100% பாது­காப்பு இல்லை அல்­லவா! எதிர்­கா­லத்­தில் மாத்­திரை வடி­வில் தடுப்பு மருந்­து­கள் வர­லாம் என்று ஒரு­வர்­மூ­லம் கேள்­விப்­பட்­டேன். தற்­போது கொரோனா தடுப்­பூ­சி­மீது முழு­தாய் நம்­பிக்கை வர­வில்லை," என்று திரு­வாட்டி மேனகா கூறி­னார்.

கொரோனா தடுப்­பூசி குறித்த பல பொய்ச் செய்­தி­கள் சமூக ஊட­கங்­களில் உலவி வரு­கின்­றன. எடுத்­துக்­காட்­டாக, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டால் மார­டைப்பு, பக்­க­வா­தம் வர­லாம் என்ற வதந்தி இவ்வாண்டு மார்ச், ஏப்­ரல் மாதங்­களில் ஃபேஸ்புக்­கில் பர­வி­யது. அத­னைத் தொடர்ந்து, அந்தத் தகவலில் உண்­மை­யில்லை என்று ஏப்­ரல் 15ஆம் தேதி ஓர் அறிக்கை வாயி­லாக சுகா­தார அமைச்சு விளக்­கம் அளித்­தது.

பொய்ச் செய்­தி­களும் வதந்­தி­களும் மூத்­தோ­ரின் அச்­சத்­திற்கு ஒரு முக்­கிய கார­ணம் என்­றார் 'சன்­லவ்' இல்­லத்­தின் தலை­மைத் திட்ட அதி­காரி திரு க.ராஜ­மோகன், 60.

சன்­லவ் இல்­லம் 2,000க்கும் மேற்­பட்ட முதி­ய­வர்­க­ளுக்கு சேவை­யாற்றி வரு­கிறது.

"'வாட்ஸ்­அப்' மூலம் வரும் பொய்ச் செய்­தி­கள் போன்­ற­வற்றை முதி­ய­வர்­கள் சிலர் நம்­பி­வி­டு­கின்­ற­னர். மேற்­கத்­திய மருந்தை நம்­பு­வதை­விட ஆயுர்­வே­தம், ரசம் குடிப்­பது போன்ற பாரம்­ப­ரிய முறை­களைப் பின்­பற்­றி­னால் போதும் என்­றும் சிலர் நம்­பு­கின்­ற­னர்," என்­றார் திரு ராஜ­மோ­கன்.

தனி­யா­கத் தங்­கி­யி­ருப்­ப­தால் தடுப்­பூசி தேவை­யில்லை, ஏற்­கெ­னவே இருக்­கும் உடல்­நலப் பிரச்­சி­னை­களை கொரோனா தடுப்­பூசி மோச­ம­டை­யச் செய்­து­வி­ட­லாம், கொரோனா தொற்­றி­னால் கட­வுள் பார்த்­துக்­கொள்­வார் என்­றெல்­லாம் முதி­யோ­ரில் சிலர் கூறு­வ­தாக அவர் சொன்­னார்.

"தவ­றான சிந்­த­னை­களை அகற்ற மருத்­து­வரை நாடுங்­கள் என்று வய­தா­ன­வர்­க­ளி­டம் சொல்­வேன். தனிப்­பட்ட பாது­காப்­புக்கு இல்லை என்­றா­லும் சுற்­றி­யுள்­ள­வர்­க­ளின் பாது­காப்­புக்­கா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது அவ­சியம்," என்று திரு ராஜ­மோ­கன் வலி­யு­றுத்­தி­னார்.

தடுப்­பூசி என்­றால் பொது­வாக 10 முதல் 15 ஆண்டு கால­மாக தயா­ரிக்­கப்­ப­ட­வேண்­டும், ஆனால் கொவிட்-19 தடுப்­பூசி ஆறு மாதங்­களில் எப்­ப­டித் தயா­ரிக்­கப்­பட்­டது என்ற கேள்­வி­யும் பல­ரி­டம் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அறி­வி­ய­லும் தொழில்­நுட்­ப­மும் பன்­ம­டங்கு வளர்ச்சி கண்­டுள்ள இந்த நவீன காலத்­தில் தடுப்­பூ­சி­வேக­மாகத் தயா­ரிக்­கப்­ப­டு­வ­தில் வியப்­பே­தும் இல்லை என்­கி­றார் டாக்­டர் க.வெள்­ளை­யப்­பன், 76.

"கிட்­டத்­தட்ட பத்­தாண்­டு­க­ளுக்­கும் மேலாக எம்­ஆர்­என்ஏ (mRNA) தொழில்­நுட்­பம் குறித்து அறி­வி­ய­லா­ளர்­கள் ஆராய்ச்சி செய்து வரு­கின்­ற­னர். இது முற்­றி­லும் புதிய தொழில்­நுட்­பம் என்று சொல்­லி­விட முடி­யாது. கொரோனா தொற்­றுக்­கான தடுப்­பூ­சி­கள் பாது­காப்­பானவை என்று உறு­தி­யான பின்­னரே அவை உல­க­மெங்­கும் விநி­யோ­கிக்­கப்­பட்­டன. மற்ற நாடு­களைப்­போல் சிங்­கப்­பூ­ரும் அவற்­றின் பாது­காப்பை மதிப்­பிட்ட பிறகே அவை அனு­ம­திக்­கப்­பட்­டன," என்­றார் டாக்­டர் வெள்­ளை­யப்­பன்.

"கொவிட்-19 உட்­பட எந்த நோய்க்­கான தடுப்­பூ­சியை எடுத்­துக்­கொண்­டா­லும் அத­னால் 100% திறம்­பட செய­லாற்ற முடி­யாது. தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டா­லும் நோய் தொற்ற வாய்ப்­புள்­ளது. ஆனால், தொற்­று­வ­தற்­கான வாய்ப்பு பல மடங்கு குறை­கிறது. நோய் வந்­தா­லும் அது உட­லில் விளை­விக்­கக்­கூ­டிய பாதிப்­பும் குறை­யும். மற்­ற­வர்­க­ளுக்­குக் கிருமி தொற்­றும் வாய்ப்­பு­க­ளை­யும் குறைக்­கும்," என்று அவர் விளக்­கி­னார்.

"வர­லாற்­றைப் புரட்டிப் பார்த்­தால் பல கொடிய கிரு­மித்­தொற்­று­கள் ஒழிந்­த­தற்கு தடுப்­பூ­சியே முக்­கி­யக் கார­ணம் என்­பதை அறி­ய­லாம். தட்­டம்மை, இளம்­பிள்­ளை­வா­தம், காச­நோய் போன்ற பல நோய்­கள் ஒழிந்­த­தற்­குத் தடுப்­பூ­சி­களே மூல­கா­ர­ணம்," என்­றார் குழந்­தை­நல மருத்­து­வ­ரான வெள்­ளை­யப்­பன்.

'அச்சம் வேண்டாம்'

ஃபைசர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட பிறகு பக்­க­வி­ளை­வு­கள் கடு­மை­யாக இருக்­க­வில்லை என்­றார் 72 வய­தான திரு­வாட்டி ஜெய­மணி ஒவி­ரெட்டி.

"தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­பின் ஓரிரு நாள்­க­ளுக்­குக் கையைத் தூக்க சற்று சிர­ம­மாக இருந்­தது, இலே­சான காய்ச்­சல் வந்­தது. 'பெனடால்' மாத்­திரை சாப்­பிட்டு ஓய்வு எடுத்­தேன். சிர­ம­மான நட­வடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. அதுவே சரி­யா­கி­விட்­டது," என்று சொன்­னார் திரு­வாட்டி ஜெய­மணி.

"சரி­யான தக­வல்­களை அறிந்து­கொள்­வது முக்­கி­யம். நல­மாக இருந்­தால் தடுப்­பூசி தேவை­யில்லை என்று நினைக்­க­லாம். ஆனால், அதன் நன்­மை­க­ளைப் பற்றி படித்து, அறிந்து, தெரிந்­து­கொண்டு, கிரு­மித்­தொற்­றின் கொடிய விளை­வு­களி­லி­ருந்து பாது­காத்­துக்­கொள்­வதே சிறந்த தெரி­வா­கும்," என்­றார் 'ஸ்ரீ நாரா­யண மிஷன்' இல்­ல­வாசி திரு­வாட்டி கமலா கிருஷ்­ணன், 85.

முன்­வ­ரும் மூத்­த குடிமக்கள்

சிங்­கப்­பூ­ரின் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் விகி­தம் நாள்­தோ­றும் ஒரு விழுக்­காடு அதி­க­ரித்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஒவ்­வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்­தோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள பதிவுசெய்­கின்­ற­னர்.

தேசிய தின­வாக்­கில், மக்­கள்­தொ­கை­யில் 70 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருப்­பர் என்­றும் அவ்­வி­கி­தம் செப்­டம்­ப­ரில் 80 விழுக்காடாக உய­ரும் என்­றும் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் அண்­மை­யில் தெரி­வித்­து இருந்­தார்.

"இத­னால், உல­கி­லேயே ஆக அதி­க­மாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட விகி­த­முள்ள நாடு­களில் ஒன்­றாக சிங்­கப்­பூர் இருக்­கும். கொவிட்-19 தொற்றை எதிர்க்­கும் மீள்­தி­றன் கொண்ட சமூ­க­மாக உரு­மா­று­வ­தற்கு இது நம்மை ஒரு வலு­வான நிலை­யில் வைக்­கிறது," என்­றார் திரு ஓங்.

இஸ்­ரேல், அமெ­ரிக்கா, பிரிட்­டன் போன்ற நாடு­களில் கொரோனா கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட, அந்த ­நா­டு­களில் அதி­க­மான முதி­ய­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தும் ஒரு கார­ணம் என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

கொவிட்-19 தடுப்பூசி: சுகாதார அமைச்சின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள்

♦ கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்கொள்ள 60 வயதிற்கும் மேற்பட்டோர் முன்­ப­திவு செய்­யத் தேவை­யில்லை. அவர்­கள் நேர­டி­யாக ஏதே­னும் ஒரு பல­துறை மருந்­த­கம் அல்­லது தடுப்பூசி நிலையத்திற்குச் சென்று தடுப்­பூசி போட்டுக் கொள்ளலாம்.

♦ பொது மருத்துவர்களையும் அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களையும் சுகாதார அமைச்சு அணுகி உள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு ஆலோசனை வழங்கி, தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

♦ ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, மூத்தோர் தலைமுறை அலுவலகம், மக்கள் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தொண்டூழியர்கள், மூத்தோர் வசிக்கும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, தடுப்பூசி போட்டுக்கொண்டனரா என்று விசாரித்து வருகின்றனர்.

♦ பயணம் செய்ய சிரமப்படும் மூத்­தோ­ருக்கு உத­வும் வகை­யில் நடமாடும் தடுப்­பூசிக் குழுக்­களைக் குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­க­ளுக்கு அனுப்பி உள்ளது சுகா­தார அமைச்சு. அக்­கு­ழுக்­கள் தற்­போது புக்­கிட் மேரா, செங்­காங், தெம்­ப­னிஸ், ஈசூன் உள்ளிட்ட பத்துக் குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களில் செயல்­பட்டு வரு­கின்­றன.

♦ வீட்­டை­விட்டு வெளியே செல்ல சிர­மப்­படும் மூத்தோருக்காக, அவர்களது வீட்டிற்கே மருத்துவர், தாதியரை அனுப்பி, தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஏற்பாடுகளைச் சுகாதார அமைச்சு வழங்கி வருகிறது.

மூத்தோரைக் கவரும் காணொளித் தொகுப்பு

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள ஊக்கு­விக்­கும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்­கம் ஒரு­பக்­கம் மேற்­கொண்டு வந்­தா­லும், இந்­திய மூத்­தோ­ரைக் கவ­ரும் வண்­ணம் பிடித்­த­மான நடிகர்­க­ளைச் சித்­தி­ரிக்­கும் காணொளி­க­ளைத் தமி­ழர் பேர­வை­யும் சிற்பி­கள் மன்­ற­மும் இணைந்து தயா­ரித்­துள்­ளன.

நான்கு பாகங்களைக் கொண்ட இந்தக் காணொளித் தொகுப்பு தற்­போது ஃபேஸ்புக்­கில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

தமி­ழர் பேர­வை­யின் இளை­யர் பிரி­வுத் தலை­வ­ரான திரு அருண் வாசு­தேவ் கிருஷ்­ணன் இந்­தப் புத்­தாக்க சிந்­த­னையை முன்­வைத்­தார் என்­றும் பார்­வை­யா­ளர்­க­ளி­டம் விரைந்து தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில், அவை கிட்­டத்­தட்ட இரண்டு நிமி­டக் காணொ­ளி­களாகத் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் தமி­ழர் பேர­வை­யின் பொதுச் செய­லாளர் திரு கே.எஸ். மணி­யம், 50, குறிப்­பிட்­டார்.

"சிவாஜி கணே­சன், எம்ஜிஆர் போன்று மூத்­தோர் நன்கு அறிந்த நடி­கர்­களை மையப்­ப­டுத்தி, காணொ­ளி­கள் தயா­ரிக்­கப்­பட்­டு உள்­ளன. மகிழ்ச்சி அளிக்­கக்­கூடிய, சுவா­ர­சி­ய­மான இக்காணொ­ளி­களில் தடுப்­பூ­சி­யின் முக்­கி­யத்­துவம் குறித்த கருத்­து­கள் நுட்­ப­மா­கச் சேர்க்­கப்­பட்­டுள்­ளன," என்­றார் திரு மணி­யம்.

'பிரேம்ஸ்­டார்ஸ் புரொ­டக் ஷன்' (PremStarz Production) நிறு­வ­னம் நிபு­ணத்­து­வ­மிக்க முறை­யில் தயா­ரித்­துள்ள அந்­தக் காணொ­ளி­கள் மூத்­தோ­ரி­டம் பழைய நினை­வு­களை மல­ரச் செய்­ய­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

வழிபாட்டுத் தலங்களில் தடுப்பூசி விழிப்புணர்வு மையம்

சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­க­மும் (சிண்டா) இந்து அறக்­கட்­டளை வாரி­ய­மும் இணைந்து இந்­தி­யர்­க­ளி­டையே தடுப்­பூசி குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்த சமூ­கத்­தைச் சென்­ற­டை­யும் மையங்­களை அமைத்­துள்­ளன.

இந்­தி­யர்­கள் அதி­க­மா­கச் செல்­லும் வழி­பாட்­டுத் தலங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள 12 மையங்­களில் இது­வரை 1,300க்கும் மேற்­பட்­டோரை அணு­கி­யுள்­ள­தாக சிண்டா தெரி­வித்­தது.

"கடந்த சில நாள்­க­ளாக ஈரச்­சந்­தை­க­ளி­லும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் சமூ­கக் கிருமித்­தொற்று பாதிப்­பு­கள் அதி­க­ரித்­து உள்­ளன.

"இது­போன்ற இடங்­க­ளுக்கு முதி­ய­வர்­கள் அதி­க­மா­கச் செல்­வதுண்டு. அவர்­கள் தடுப்­பூசி போடா­மல் இருப்­ப­தால் உடல்­நலத்­திற்­குப் பாதிப்பு ஏற்­படும் வாய்ப்பு­கள் அதி­க­மா­கின்­றன," என்­றார் சிண்டா தலைமை நிர்­வாக அதி­காரி அன்­ப­ரசு.

தடுப்­பூசி குறித்த வதந்­தி­களையும் பொய்ச்­செய்­தி­க­ளை­யும் ஒழிக்க சிண்டா ஊழி­யர்­களும் தொண்­டூ­ழி­யர்­க­ளும் முறை­யான தக­வல்­க­ளைப் பொது­மக்­க­ளு­டன் பகிர்ந்­து­ வ­ரு­கின்­ற­னர்.

"தேசிய அளவை ஒப்­பி­டும்­போது இந்­தி­யர்­க­ளி­டையே தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் விகி­தம் குறை­வாக இருக்­க­லாம், ஆனால், மிகக் குறைவு என்­றும் சொல்ல முடி­யாது. இதற்கு, பதிவு செய்­யும் தளத்­தைப் பயன்­ப­டுத்த தெரி­யா­தது, திறன்­பேசி இல்­லா­தது, குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் வழி­காட்­டு­தல் இல்­லா­மல் இருப்­பது என்­பன போன்ற பல கார­ணங்­கள் இருக்­க­லாம்," என்­றார் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு த. ராஜ­சே­கர்.

பத்­துக் கோவில்­க­ளி­லும் இரண்டு பள்­ளி­வா­சல்­க­ளி­லும் இந்த மையங்­கள் அமைக்­கப்­பட்டு உள்­ளன. ஜாமிஆ (சூலியா) பள்ளி­வா­சல் அவற்­றில் ஒன்று.

"உட­லில் நோய் எதிர்ப்­பாற்­றல் குறை­வாக இருப்­ப­தி­னால்­தான் தொற்­று­நோய்ப் பாதிப்பு ஏற்­ப­டு­கிறது. நோய் எதிர்ப்­பாற்­றலை அதி­க­ரித்து நம்­மை­யும் நம்மைச் சுற்­றி­யுள்­ள­வர்­க­ளை­யும் தடுப்­பூசி பாது­காக்­கிறது. முடிந்­த­ அ­ள­விற்கு விரை­வாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது நல்­லது," என்­றார் ஜாமிஆ (சூலியா) பள்­ளி­வா­சல் துணைத் தலை­வர் திரு ஷேக் ஃபக்­ரு­தின்.

இதற்­கி­டையே, கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இம்­மை­யங்­க­ளைக் குறித்த காணொளி சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்டு உள்­ளது. பல்­வேறு பதி­வு­கள் மூல­மாக மொத்­தம் 5,500க்கும் மேற்­பட்­டோர் அந்தக் காணொளியைப் பார்வையிட்டுள்ளனர்.