தஞ்சை: நெதர்லாந்து அரசு ஒப்படைத்த சோழர் காலத்தைச் சேர்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகள் தாயகம் வந்து சேர்ந்தன. அவற்றை தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாத்து, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். முரசொலி கடிதம் எழுதியுள்ளார்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், இது தொடர்பாக மத்திய கலாசார, சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தச் செப்பேடுகள் சோழப் பேரரசின் கடற்படை வலிமை, கடல்வழி வர்த்தகம், தென்கிழக்கு ஆசியாவுடனான தூதரகத் தொடர்புகள் குறித்த முக்கியமான சான்றுகளை வழங்குவதாக திரு முரசொலி குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு காலத்தில் தென்னிந்தியா, இலங்கையின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தியதோடு, தென்கிழக்கு ஆசியா முழுவதும் வலிமையான கடற்படைப் பயணங்களையும் மேற்கொண்ட சோழப் பேரரசின் பொற்காலம் குறித்த அரிய முதன்மைச் சான்றுகளை இச்செப்பேடுகள் அளிக்கின்றன,” என்று திரு முரசொலி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஆனைமங்கலம் செப்பேடுகளை பொதுமக்கள் பார்வைக்காக தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் வைப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, செப்பேடுகளை கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுமக்கள் பார்வைக்கு நிரந்தரமாகக் காட்சிப்படுத்த வேண்டும் என கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.கோமகன் வலியுறுத்தியுள்ளார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழனின் கொடைத்திறன், மதநல்லிணக்கம், நிர்வாக நேர்மை, அனைத்துலகப் பார்வை ஆகியவற்றை எடுத்துக்கூறும் அரிய பொக்கிஷமாக இந்தச் செப்பேடுகள் விளங்குகின்றன.
எனவே, அவை பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோமல் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் செப்பேடுகளை வெறும் நிர்வாக ஆவணங்களாகக் கருதவில்லை என்றும் மத்தியகால தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் பன்முகப் பண்பாடு, வணிகத் தொடர்புகள் நிறைந்த உலகின் முக்கியத் தடயங்களாக திகழ்கின்றன என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

