சென்னை: சென்னை, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட முன்னணி சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துத் தமிழகக் கால்நடைப் பராமரிப்புத்துறை செவ்வாய்க்கிழமை (மே 19) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் குதிரைகளுக்குப் பரவி வரும் ஆபத்தான ‘கிளண்டர்ஸ்’ கிருமித் தொற்று பாதிப்பு குறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அருண்ராஜ் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாகவே இந்த எச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய கட்டுப்பாடுகள், வழிமுறைகள்
காய்ச்சல், இருமல், மூக்கில் சளி வடிதல், தோல் புண்கள், சுவாசக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உள்ள குதிரைகளை எக்காரணம் கொண்டும் சவாரிக்குப் பயன்படுத்தக் கூடாது.
நோயுற்ற குதிரைகளை உடனடியாகத் தனிமைப்படுத்திப் பராமரிக்க வேண்டும். குதிரைகளின் தேவையற்ற போக்குவரத்தைத் தவிர்க்கவேண்டும்.
குதிரைகள் தங்கும் இடங்களையும் சவாரிக்கு உபயோகிக்கும் உபகரணங்களையும் முறைப்படி கிருமி நாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.
சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் மட்டுமின்றி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களிலும் இக்கட்டுப்பாடுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

