You are here

உல‌க‌ம்

தங்க இடமின்றி தவிக்கும் ஈரானிய மக்கள்

டெஹ்ரான்: ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் தங்குவதற்கு இடமின்றி இரண் டாவது நாளாக நேற்று கடும் குளிரில் வெட்டவெளியில் இரவுப் பொழுதைக் கழித்தனர். ஈரானின் கெர்மான்சா மாநிலம் நிலநடுக்கத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துவிழுந்து தரைமட்டமாகின. மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் உடனடி நிவாரணப் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

செனட் வேட்பாளர் ராய் மூர் போட்டியிலிருந்து விலக குடியரசுக் கட்சியினர் நெருக்குதல்

வா‌ஷிங்டன்: அமெரிக்க செனட் சபை உறுப்பினராவதற்கு அலபா மாவில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராய் மூர் மீது பல பெண்கள் தற்போது பாலியல் புகார்கள் கூறி வருவதைத் தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று அமெரிக்க செனட் பெரும்பான்மைத் தலைவர் மிச் மெக்கோனல் தலைமையில் குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ராய் மூர், 14 வயது சிறுமி யுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாகவும் பல இளம் பெண்களுடன் காதல் உறவை தொடர்ந்ததாகவும் ராய் மூர் மீது புகார்கள் கூறப்படுகிறது.

வடகொரியாவுக்கு நெருக்குதல் கொடுக்க தலைவர்கள் இணக்கம்

மணிலா: வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட அந்நாட்டின் மீது அதிகபட்ச நெருக்குதல் கொடுக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் கிழக்கு ஆசிய மற்றும் ஆசியான் தலைவர்களும் விரும்புகின்றனர். நேற்று கிழக்கு ஆசிய மாநாடு தொடங்குவதற்கு முன்பு வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். வடகொரியாவின் பேரழிவு ஆயுத மேம்பாடு குறித்தும் ரசாயன மற்றும் ஏவுகணை தொழிட்நுட்பம் குறித்தும் தாங்கள் மிகுந்த கவலை கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஈரான், ஈராக்கில் நிலநடுக்கம்: 348 பேர் பலி; பலர் காயம்

பாக்தாத்/அங்காரா: ஈரான், ஈராக் நாடுகளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தில் குறைந் தது 348 பேர் உயிரிழந்ததாகவும் 6,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் இரு நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இன்னும் பலரைக் காணவில்லை என்பதால் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டி ருக்கின்றன. ஈரானின் தொலைவான பகுதி களில் தேடும் பணிகள் தொடரும் போது மரணமடைந்தோரின் எண் ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

‘சவூதி போர்க் கப்பல்களைத் தகர்ப்போம்’: கிளர்ச்சியாளர்கள்

துபாய்: சவூதி தலைமையிலான கூட்டணிப் படை ஏமனில் உள்ள துறைமுகங்களை மூடியதைத் தொடர்ந்து அதற்குப் பதிலடியாக எதிரி நாடுகளின் போர்க் கப்பல் களையும் எண்ணெய் கிணறு களையும் தாங்கள் தகர்க்கக்கூடும் என்று ஏமனில் உள்ள ஆயுதம் ஏந்திய ஹுதி கிளர்ச்சிப் படையினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இம்மாதம் 4 ஆம் தேதி ரியாத் விமான நிலையத்தை நோக்கி கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை வீசப்பட்டதற்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹுதி கிளர்ச்சி யாளர்களே காரணம் என்று சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.

‘போர்க்குற்றங்கள் நடந்தது உண்மையே’

விடுதலைப் புலிகளுடனான உள் நாட்டுப் போரின்போது அரசியல் வாதிகளின் கட்டளையை ஏற்று ராணுவத்தினர் சிலர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது உண்மை தான் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார். இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது கடந்த 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை ராணு வத்தினரால் சுமார் 40,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் மன்றம் கூறி வருகிறது.

நீர்த்தேக்கத்தைப் பார்வையிட்ட

சுல்தான் இஸ்கந்தர் குனுங் புலாயில் உள்ள நீர்த் தேக்கத்தையும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் நேற்று முன்தினம் பார்வையிட்டார். 1924ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுல்தான் இப்ராகிம் நீர்த்தேக்கம், நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியன ஜோகூர்பாரு வுக்கு வடக்கே அமைந்துள்ளன. முன்னறிவிப்பு ஏதுமின்றி நீர்த் தேக்கத்தைப் பார்வையிட்ட சுல்தான், அந்தப் பகுதி தூய்மை யாகவும் சீராகவும் பராமரிக்கப் படுகிறதா என்பதை ஆய்வு செய்த தாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

டிரம்ப்: கிம்மை இனி குண்டு, குள்ளம் எனக் கூறமாட்டேன்

ஹனோய்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர் தங்களுக்கிடையே தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் சாடிக்கொண்டதோடு இரு நாடு களுக்கிடையே போர் மூளும் அபா யமும் சில மாதங்களாக இருந்து வந்தது. இவ்வேளையில் திரு கிம்மை இனிமேல் ‘குள்ளம், குண்டு’ என்று குறிப்பிடப் போவதில்லை என்று திரு டிரம்ப் கூறியுள்ளார். இதனால் திரு கிம் தம்மை ‘வயதானவர்’ என்று கூறுவதற்கான வாய்ப்பு இருக்காது என்று கூறிய திரு டிரம்ப், வடகொரியாவுடன் நட்புடன் இருக்கவே தாம் விரும்புவதாகவும் ஒரு நாள் அது சாத்தியமாகலாம் எனவும் ஹனோயிலிருந்து டுவீட் செய்துள்ளார்.

மலேசியாவில் நாளை முதல் வடகிழக்குப் பருவமழை

தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளிலும் சாபா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்கலாம் என்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மழை நீடிக்கும் என்றும் முன்னுரைக்கப் பட்டுள்ளது. “வரும் டிசம்பர் மாதம் வரை கிளந்தான், திரெங்கானு, பாஹாங், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் மேற்கு சரவாக்கிலும் வடக்கு, கிழக்கு சாபாவிலும் கனமழை பெய்யலாம்,” என்று வானிலைத் துறையின் அறிக்கை கூறுகிறது.

மணிலா கூட்டத்தில் வர்த்தகம், பயங்கரவாதம் முக்கிய பேச்சு

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நாளைத் தொடங்கும் ஆசியான் தலைவர்களின் உச்ச நிலைக் கூட்டத்தில், பயங்கரவாத மிரட்டல், பாதுகாப்பு, வர்த்தகம், தென்சீனக் கடல் பிரச்சினை, வடகொரிய விவகாரம் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளன. ஆசியானின் 10 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் அதன் கலந்துரையாடல் பங்காளி நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தை பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே தொடங்கிவைத்து உரையாற்றுவார்.

Pages