சான் டியோகோ: அமெரிக்காவின் கலிஃபோர்னிய மாநிலத்திலுள்ள சான் டியாகோ நகர இஸ்லாமிய நிலையத்தில் திங்கட்கிழமை (மே 18) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதுகாவலர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய இரண்டு பதின்ம வயதினரும் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு இறந்ததாகக் காவல்துறை கூறியது.
கொல்லப்பட்ட மூவரும் பள்ளிவாலுக்கு வெளியே இருந்தவர்கள்.
சான் டியோகோ நகரின் ஆகப் பெரிய பள்ளிவாசலில் நடத்தப்பட்டிருக்கும் அந்தத் தாக்குதலைச் சட்ட அமலாக்கத் துறையும் மத்திய புலனாய்வுப் பிரிவும் வெறுப்புக் குற்றமாக வகைப்படுத்தி விசாரித்து வருகின்றன. சான் டியாகோ காவல்துறைத் தலைவர் ஸ்காட் வாஹ்ல் செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்தார்.
இருப்பினும், அந்த வன்முறைச் சம்பவத்திற்கான தூண்டுதல் என்ன என்பது பற்றி அதிகாரிகள் வெளிப்படையாக எதனையும் தெரிவிக்கவில்லை.
சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (மே 19) அதிகாலை 2.40 மணியளவில் நடந்த அந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்குப் பின்னர், பள்ளிவாசல் வளாகத்தில் இயங்கும் பகல்நேரப் பள்ளியிலிருந்த குழந்தைகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சம்பவம் நடந்ததற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு காவல்துறையை அழைத்த பெண் ஒருவர், தமது மகன் மூன்று துப்பாக்கிகளையும் வாகனத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து தப்பி ஓடியதாய்க் கூறியதாக அதிகாரி ஸ்காட் வாஹ்ல் தெரிவித்தார்.
தமது மகனுடன் மற்றோர் ஆடவர் இருந்ததாகவும் அவ்விருவரும் அடையாளத்தை மறைக்கும் வகையில் உடையணிந்து இருந்ததாகவும் அவர் காவல்துறையிடம் கூறியதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தமது மகன் தற்கொலை எண்ணம் கொண்டவர் என்றும் தப்பி ஓடுவதற்கு முன்னர் அவர் குறிப்பு ஒன்றை விட்டுச்சென்றார் என்றும் பெண் கூறியிருந்தார். ஆயினும் அந்தக் குறிப்பு என்ன என்பதைத் தெரிவிக்கக் காவல்துறை மறுத்துவிட்டது.

