அமெரிக்காவிடமிருந்து வேளாண் பொருள்களை அதிகம் வாங்கச் சீனா திட்டம்

அமெரிக்காவிடமிருந்து வேளாண் பொருள்களை அதிகம் வாங்கச் சீனா திட்டம்

1 mins read
a6d244eb-084d-409f-8bb8-b11ffdee4f44
கடந்த ஆண்டில் இருதரப்பு வர்த்தகம், 2024ஐக் காட்டிலும் 65.7 விழுக்காடு குறைந்து $8.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்று அமெரிக்க வேளாண் துறைத் தரவுகள் கூறுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவிடமிருந்து ஆண்டுதோறும் குறைந்தது 17 பில்லியன் அமெரிக்க டாலர் ($21.8 பில்லியன்) பெறுமான வேளாண் பொருள்களை வாங்கச் சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

அது 2026, 2027, 2028 என மூன்று ஆண்டுகளுக்குப் பொருந்தும். வெள்ளை மாளிகை ஞாயிற்றுக்கிழமை (மே 17) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சென்ற வாரம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் பெய்ஜிங்கில் சந்தித்தபோது அது உறுதிசெய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

அண்மையில் ஒப்புக்கொள்ளப்பட்ட 17 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியில் சோயா பீன்ஸ் வாங்குவதாகச் சீனா கடந்த ஆண்டு (2025) அக்டோபரில் கொடுத்த உறுதிமொழி அடங்காது என்றும் அது குறிப்பிட்டது.

சென்ற ஆண்டு இருதரப்பும் மாறி மாறி ஒன்று மற்றதன்மீது புதிய தீர்வைகளை விதித்தன. அதனால், வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் அது, 2024ஐக் காட்டிலும் 65.7 விழுக்காடு குறைந்து $8.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்று அமெரிக்க வேளாண் துறைத் தரவுகள் கூறுகின்றன.

அமெரிக்க மாட்டிறைச்சி நிறுவனங்கள் மீதான தடைகளை நீக்கச் சீனா அந்நாட்டின் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டது. பறவைக் காய்ச்சல் பாதிப்பற்ற கோழி இறைச்சியைச் சீனா மீண்டும் அமெரிக்க மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யவும் முயற்சி எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்