கொழும்பு: கம்போடியா, மியன்மார் போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் இணைய மோசடிக் கும்பலுக்கு எதிராகக் கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதைத் தொடர்ந்து, இலங்கையில் வெளிநாடுகளைச் சேர்ந்த இணைய மோசடிப் பேர்வழிகள் கைது செய்யப்படுவது அண்மைகாலமாகப் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், இணையக் குற்றங்களின் புதிய மையமாக இலங்கை மாறிவிடக்கூடும் என்ற கவலை அந்நாட்டு அதிகாரிகளிடையே எழுந்துள்ளது.
தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சில மோசடிக் கும்பல்கள், தற்போது தங்களின் செயல்பாட்டுத் தளங்களை இலங்கைக்கு மாற்றியுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நீக்குப்போக்கான விசா நடைமுறைகள், நம்பகமான, அதிவேக இணைய வசதிபோன்ற காரணங்களால், அத்தகைய நாசகாரக் கும்பல்களுக்கு உகந்த இடமாக இலங்கை மாறியுள்ளதாக அவர்கள் கூறுகின்றன.
2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சீனா, வியட்னாம், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை உயரதிகாரி ஃபிரட்ரிக் வூட்லர் கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டு முழுவதும் மொத்தம் 430 வெளிநாட்டவர்களே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை இன்னும் குறைவாகவே இருந்தது என்றார் அவர்.
ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை மிகக் குறுகிய காலத்தில் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரல் மாதத்தில், நூற்றுக்கணக்கான பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகள், மடிக்கணினிகளைக் கடத்த முயன்ற ஒன்பது சீன நாட்டினரை இலங்கை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அவை அனைத்தும் பெரிய அளவிலான இணைய மோசடித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவிருந்தவை எனக் கூறப்பட்டது.
இந்தியா, வியட்னாம், பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட மக்களைக் குறிவைத்து இலங்கையில் பதுங்கியிருந்து இயங்கும் மோசடிக் கும்பல்கள் ஏமாற்றி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அவர்களின் அடுத்த இலக்கு இலங்கைவாசிகளாக இருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது தவிர, இலங்கையின் நிதி அமைச்சுமீது அண்மையில் நடத்தப்பட்ட இணையத் தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு மோசடிக் கும்பல்களுக்குத் தொடர்பிருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. அதுகுறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த இணையத் தாக்குதல் காரணமாக இலங்கைக்குக் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் (3.2 மில்லியன் வெள்ளி) நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

