ஷா அலாம்: சிலாங்கூர் காவல்துறையினர் 5.25 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர்.
அதன் தொடர்பில் மலேசிய ஆடவர் ஒருவரும் கோயில் ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இம்மாதம் (மார்ச்) 3ஆம் தேதி கோம்பாக் வட்டாரத்தில் ஒரு வேனிலிருந்து 105 கிலோகிராமுக்கும் அதிகமான மெத்தம்ஃபெட்டமைன் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிலாங்கூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவும் கோம்பாக் பிரிவும் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் அவை சிக்கின.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஷஸேலி கஹார், 64 பிளாஸ்டிக் பைகளைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்தார்.
“அவை அனைத்தும் ஐந்து கேன்வாஸ் பைகளில் வேனின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்தன,” என்றார் அவர். சிலாங்கூர் காவல்துறைத் தலைமையகத்தில் புதன்கிழமை (மார்ச் 11) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு ஷஸேலி அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
பொருள் விநியோகச் சேவை மூலம் போதைப்பொருள்கள் அனுப்பப்பட்டதாய்ச் சந்தேகிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
பிடிபட்ட இருவரில் ஒருவர், 34 வயது மலேசிய ஆடவர். அவர் பொருள் விநியோகச் சேவை ஊழியராகப் பணிபுரிகிறார். இரண்டாமவர், 47 வயது வெளிநாட்டவர். அவர் பத்துமலையில் உள்ள கோயிலில் வேலை செய்கிறார்.
மலேசியர் ஏற்கெனவே மூன்று குற்றச் செயல்களில் தொடர்புடையவர் என்பது சோதனைகளில் தெரியவந்துள்ளது. கைதான வெளிநாட்டவர், மலேசியாவில் இதற்கு முன்னர் குற்றச் செயல் எதிலும் ஈடுபட்டிருக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“சந்தேக நபர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது சிறுநீர்ப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது,” என்றார் திரு ஷஸேலி.
காவல்துறை 2,000 ரிங்கிட் மதிப்புள்ள மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தது.
விசாரணை தொடர்கிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆபத்தான போதைப்பொருள்கள் சட்டத்தின்கீழ் (1952) குறைந்தது 12 பிரம்படியோடு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும்.

