நியூயார்க்: சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற தீராத நோய்களை இரண்டே நாளில் குணப்படுத்துவதாக ஃபேஸ்புக்கில் வெளியாகும் போலி விளம்பரங்கள், உலகளவில் பெரும் அச்சுறுத்தலாய் உருவெடுத்துள்ளதாக ‘ரீசெட் டெக்’ என்ற பொதுக் கொள்கை அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியப் பயனீட்டாளர்களைக் குறிவைத்து, தணிக்கை செய்யப்படாத 390 உடல்நலப் பொருள்களுக்காக ஏறக்குறைய 350,00க்கும் அதிகமான விளம்பரங்கள் 2023ஆம் ஆண்டு முதல் 2026 வரை ஃபேஸ்புக்கில் உலா வந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டோரின் பலவீனத்தைப் பயன்படுத்தி அந்த விளம்பரங்கள் ஏமாற்றுவதாகத்கின்றன என்று திட்ட இயக்குநர் அலெக்ஸாண்ட்ரா அடனசோவா தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைபாடுகளைக் குணப்படுத்துவதாகக் கூறும் விளம்பரங்களுக்கு மெட்டா நிறுவனத்தின் கொள்கைகளில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றைக் கண்காணிப்பதில் அந்நிறுவனம் மெத்தனமாகச் செயல்படுவதாக அறிக்கை கூறுகிறது.
ஆபத்தான, தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் கொண்ட உடல் எடைக் குறைப்பு மாத்திரைகளும் சர்க்கரை நோய்க்கான போலி மருந்துகளும் அவற்றில் அடங்கும்.
மெட்டா நிறுவனம், குறிப்பிட்ட சில விளம்பரங்களை மட்டும் நீக்குகிறதே தவிர, அந்தப் பக்கங்களை முழுமையாக முடக்குவதில்லை. அதனால், ஒரே பெயரைக் கொண்ட கணக்குகள், அடுத்தடுத்த நாள்களில் நூற்றுக்கணக்கான புதிய விளம்பரங்களை எளிதாகப் பதிவேற்றுகின்றன.
தங்கள் கொள்கைகளை மீறிய விளம்பரங்களும் பக்கங்களும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் மெட்டா செய்தித் தொடர்பாளர் டேனியல் ராபர்ட்ஸ்.
கூகல் நிறுவனத்திலும் இத்தகைய போலி விளம்பரங்கள் சில கண்டறியப்பட்டாலும் ஃபேஸ்புக்கில் அதன் தாக்கம் பல மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

