எரிபொருள் விலை உயர்வு: ஆசிய விமான நிறுவனங்களின் சேவை முடங்கும் அபாயம்

அரசாங்கம் ஆதரவு வழங்க வலியுறுத்து

எரிபொருள் விலை உயர்வு: ஆசிய விமான நிறுவனங்களின் சேவை முடங்கும் அபாயம்

2 mins read
0094309c-dbe1-4eca-86e3-8b48ecb7852a
எரிபொருள் விலை இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளதால், விமான நிறுவனங்களுக்குப் பல்வேறு அளவிலான உதவிகள் தேவைப்படுவதாக ஆசிய பசிபிக் விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

விமான எரிபொருளின் விலை இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இதனால், ஆசிய பசிபிக் வட்டாரத்திலுள்ள விமான நிறுவனங்களுக்கு அரசாங்க நிதியுதவி தேவைப்படுதாக ஆசிய பசிபிக் விமான நிறுவனங்களின் கூட்டமைப்பின் புதிய தலைமை இயக்குநர் வாங் ஹாங் தெரிவித்துள்ளார்.

இல்லையெனில் அமெரிக்காவின் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சந்தித்த சேவை முடக்கம் போன்றதொரு கடுமையான சூழலை ஆசிய நிறுவனங்களும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

விமான நிறுவனங்களுக்குப் பல்வேறு நிலைகளில் உதவிகளும் சலுகைகளும் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நேரடி நிதியுதவி முதல் விமானப் பயண அட்டவணைகளைக் குறைத்துக்கொள்ள அனுமதிப்பது வரை அனைத்தும் அதில் அடங்கும் என்றார்.

கடந்த மாதம் கூட்டமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்ற திரு வாங், “ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலையைப் போன்றதொரு சூழலை எந்தவொரு நிறுவனமும் எதிர்கொள்ளக் கூடாது. சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும்,” என வலியுறுத்தினார்.

கடுமையாக உயர்ந்த எரிபொருள் விலையின் சுமையைத் தாங்க முடியாமல், இந்த மாதத் தொடக்கத்தில் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் தனது சேவைகளை முழுமையாக நிறுத்தியது.

பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் போர் தொடங்கியதிலிருந்து ஆசிய விமான நிறுவனங்களுக்குக் கிடைத்த அரசாங்க ஆதரவு மிகவும் குறைவாக இருந்தது. பல்வேறு விமான நிலையக் கட்டணங்களுக்குக் கால நீட்டிப்புகளையும் விலக்குகளையும் மலேசியா வழங்கியுள்ளது; அதே வேளையில், அதிகரித்து வரும் நிதி நெருக்கடியைக் குறைப்பதற்காக கச்சா எண்ணெய் மீதான வரிகளை இந்தியா குறைத்துள்ளது.

இதற்கிடையே, ஹாங்காங் விமான நிறுவனங்களுக்கு இதுவரை எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை. பெரிய அளவிலான வருடாந்தர இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள போதிலும், நியூசிலாந்து அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ‘ஏர் நியூசிலாந்து’ நிறுவனத்திற்கும் இதுவரை எந்தவொரு நிதியுதவியும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த நிறுவனம் தனது செலவினக் குறைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.

விமானப் பயணச் சேவைகளைக் குறைத்துக்கொண்டதற்காகச் சில நிறுவனங்கள், அரசாங்கங்களின் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகியிருப்பதைச் சுட்டிக்காட்டிய திரு வாங், இத்துறையின் சவால்களை இன்னும் ஆழமாக அரசுகள் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்