தோக்கியோ: இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பஞ்ச்’ என்ற குரங்கின் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்கர்கள் என்று கூறிக்கொள்ளும் இருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவுக்கு அருகில் உள்ள இச்சிகாவா நகர விலங்கியல் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 17) காலை இச்சம்பவம் நிகழ்ந்தது. விசித்திரமான உடை அணிந்திருந்த 24 வயது இளைஞர் ஒருவர், குரங்குகள் இருக்கும் பகுதியின் பாதுகாப்பு வேலியைத் தாண்டி அத்துமீறி உள்ளே குதித்தார்.
அப்போது அவருடன் இருந்த 27 வயதுடைய மற்றொருவர், அதனைத் தமது கைப்பேசியில் காணொளி எடுத்தார். அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள அந்த விலங்கியல் தோட்டத்தின் அன்றாடச் செயல்பாடுகளுக்கு வேண்டுமென்றே இடையூறு விளைவித்ததாகக் கூறி, ஜப்பானியக் காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
தங்களைப் பல்கலைக்கழக மாணவர் என்றும் பாடகர் என்றும் கூறிக்கொள்ளும் அவ்விருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இந்த அத்துமீறல் சம்பவத்தில் குரங்குகளுக்குக் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயால் கைவிடப்பட்டு, ஒரு பொம்மையைக் கட்டியணைத்தபடி இருக்கும் ‘பஞ்ச்’ என்ற அந்த குரங்கின் காணொளிகள் அண்மையில் இணையவாசிகள் மத்தியில் மிக வேகமாகப் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

