முன்கூட்டியே தேர்தல் நடக்கும் ஆருடங்களுக்கு இடையே மலேசியப் பிரதமர், மாமன்னர் சந்திப்பு

முன்கூட்டியே தேர்தல் நடக்கும் ஆருடங்களுக்கு இடையே மலேசியப் பிரதமர், மாமன்னர் சந்திப்பு

2 mins read
76ee579e-9d9d-4581-a464-f32b294746d7
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமைச் சந்தித்தார் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் (இடமிருந்து 2வது). - படம்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியத்தைப் தெரிவித்த ஒரு நாள் கழித்து, மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் திங்கட்கிழமை (மே 18) அவரைச் சந்தித்துள்ளார். மலேசிய மன்னரின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில்தான் நடைபெற உள்ளது. ஆனால், ஆளும் கூட்டணிக்குள் அதிகரித்துவரும் பதற்றங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் பல மாநிலத் தேர்தல்களுடன் வாக்கெடுப்பை ஒருங்கிணைப்பதற்காகவும் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே பொதுத் தேர்தலை நடத்த மாமன்னரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற அழுத்தத்தை திரு அன்வார் எதிர்கொள்கிறார்.

சுல்தான் இப்ராஹிம், அன்வாரைத் தேசிய அரண்மனையில் சந்தித்தார். அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரும் உடனிருந்தார் என்று அந்த ஃபேஸ்புக் பதிவில் மேலும் விவரங்கள் எதுவும் அளிக்கப்படாமல் கூறப்பட்டுள்ளது.

• கருத்து தெரிவிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அன்வாரின் அலுவலகம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. இது ஒரு “வழக்கமான சந்திப்பு” என்றும் மன்னருடன் அன்வார் நடத்தும் வாராந்திர சந்திப்பின் ஒரு பகுதி என்றும் அரண்மனை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார். மேலும், அதில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.

• உட்கட்சிப் பிளவுகள் தொடர்ந்து அதிகரித்தால், திடீர் தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிப்பதாக அன்வார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அன்வாரின் அரசாங்கத்தில், அவரது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கட்சி தலைமையிலான பாரிசான் நேஷனல் கூட்டணி மற்றும் ஒரு சில சிறிய கட்சிகள் உள்ளன.

• ஜோகூர் மாநிலத்தில் வரவிருக்கும் தேர்தலில், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஒத்துழைப்பு இல்லாமல், அனைத்து (56) இடங்களிலும் தனித்துப் போட்டியிடும் என்று பாரிசான் நேஷனல் சனிக்கிழமையன்று அறிவித்தது.

அவசரப் பேச்சுவார்த்தைகளுக்காகப் பக்கத்தான் ஹரப்பான் தலைமையைக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாகவும், எந்தக் கட்சிக்கு எதிராகவும் போட்டியிடத் தங்கள் கூட்டணி தயாராக இருப்பதாகவும் அன்வார் கூறினார்.

கூட்டணிக்குள் உள்ள ஒப்பந்தங்கள் மதிக்கப்படாவிட்டால், தேர்தல்கள் ஜோகூரைத் தாண்டி நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பாகாங், பினாங்கு போன்ற மாநிலங்களையும் உள்ளடக்கி விரிவடையக்கூடும் என்று பிரதமர் அன்வார் முன்னதாகக் கூறியிருந்தார்.

அன்வார் தமது முன்னாள் அமைச்சர்களான ரஃபிஸி ராம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹமது ஆகியோரிடமிருந்தும் சவாலை எதிர்கொள்ளக்கூடும். அன்வாரின் மக்கள் நீதி கட்சியில் (பிகேஆர்) இருந்து விலகி ஒரு சிறிய கட்சிக்குத் தலைமை தாங்குவதாக அந்த இருவரும் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர். இந்த நடவடிக்கை, ஆளும் கூட்டணியில் இருந்து மேலும் பலர் கட்சித் தாவல் செய்ய வழிவகுக்கக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்
பொதுத் தேர்தல்அன்வார்ஒத்துழைப்பு