எவரெஸ்ட் சிகரத்தில் மீண்டும் ஏறி நேப்பாள மலையேறிகள் சாதனை

எவரெஸ்ட் சிகரத்தில் மீண்டும் ஏறி நேப்பாள மலையேறிகள் சாதனை

2 mins read
7904eef9-e962-4fe7-930d-94b71c9a0025
எவரெஸ்ட் சிகரத்தில் 31 முறை ஏறி உலகச் சாதனை படைத்துள்ள காமி ரீட்டா ஷெர்பா, எவரெஸ்ட் முகாமில் தம் நண்பருடன் புன்னகையுடன் சிரித்தபடி பேசுகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தை அதிக முறை ஏறிய உலகச் சாதனைக்குரியவரான நேப்பாளத்தைச் சேர்ந்த காமி ரீட்டா ஷெர்பா, 56, ஞாயிற்றுக்கிழமை (மே 17) 32ஆவது முறையாக இமயமலையின் உச்சியைத் தொட்டுத் தமது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

அதே வேளையில், மற்றொரு நேப்பாளப் பெண்மணியான லாக்பா ஷெர்பா, 52, 11ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி, பெண்களுக்கான உலகச் சாதனையை மீண்டும் படைத்துள்ளார்.

“இது நேப்பாளத்தின் மலையேறும் வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்,” என்று நேப்பாளச் சுற்றுலாத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஹிமால் கௌதம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

‘எவரெஸ்ட் மனிதன்’ என்று பரவலாக அழைக்கப்படும் காமி ரீட்டா ஷெர்பா, கடந்த 1994ஆம் ஆண்டு வணிக ரீதியிலான மலைப் பயணக் குழு ஒன்றில் பணியாற்றியபோது முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். அதன்பிறகு, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவோருக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டு, கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் அவர் எவரெஸ்ட் சிகரம் ஏறி இறங்கியுள்ளார்.

‘மலைகளின் ராணி’ என்று புகழப்படும் லாக்பா ஷெர்பா, கடந்த 2000ஆம் ஆண்டில் முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். இதன்மூலம், உலகின் மிக உயர்ந்த சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த முதல் நேப்பாளப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

“இவர்களுடைய இந்தச் சாதனைகள், மலையேறும் மற்றவர்களுக்கும் பெரும் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும்,” என்று திரு கௌதம் மேலும் கூறினார்.

“ஆரோக்கியமான போட்டியின் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இதற்கு முந்தைய சாதனையை முறியடிப்பது, மலையேறும் பயணத்தை மேலும் பாதுகாப்பானதாகவும் கண்ணியமிக்கதாகவும் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்