சுவிட்சர்லாந்தில் பேருந்து தீப்பற்றியதில் அறுவர் மரணம்

சுவிட்சர்லாந்தில் பேருந்து தீப்பற்றியதில் அறுவர் மரணம்

1 mins read
a31eb984-0bf9-4a8c-a321-d2db201c478a
சுவிட்சர்லாந்தின் கெர்ட்ஸர் நகரில் கருகிய நிலையில் காணப்பட்ட பேருந்து. - படம்: ஏஎஃப்பி

ஜெனீவா: சுவிட்சர்லாந்தின் மேற்கே உள்ள சிறிய நகரொன்றில் பேருந்து ஒன்று தீப்பற்றியதில் ஆறு பேர் மாண்டனர்.

தலைநகர் பெர்னுக்குக் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெர்ட்ஸரில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) சம்பவம் நேர்ந்தது. சாலையில் பேருந்து நெருப்பால் சூழப்பட்டிருந்தது. அதன் தொடர்பில் குற்றப் புலனாய்வு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஃப்ரீபர்க் நகரக் காவல்துறை தெரிவித்தது.

“பேருந்தில் இருந்த ஒருவர் வேண்டுமென்றே ஏதோ செய்ததால் தீப்பற்றியதாகத் தெரிகிறது,” என்று காவல்துறையின் பேச்சாளர் ஃபிரெடெரிக் பாப்போ கூறினார்.

சம்பவத்தில் வேறெந்த வாகனமும் சம்பந்தப்படவில்லை என்றார் அவர். எரிந்துகொண்டிருந்த பேருந்திலிருந்து காயமுற்ற பயணிகள் அச்சத்துடன் வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்த மூவர் மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல்துறை சொன்னது.

நெருப்பு அணைக்கப்பட்ட பிறகு கருகிய நிலையில் இருந்த பேருந்தைக் காணொளிகளில் பார்க்கமுடிந்தது.

பேருந்தில் இருந்த ஒருவர் பெட்ரோல் ஊற்றியதாகப் பரவும் ஊடகத் தகவல்கள் குறித்துத் திரு பாப்போவிடம் கேட்கப்பட்டது.

எவ்வாறு தீப்பற்றியது என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை என்றார் அவர்.

சுவிட்சர்லாந்து அதிபர் கீ பாஹ்முலன் சம்பவம் குறித்து அனுதாபம் தெரிவித்தார். நாட்டில் நேர்ந்த கடுமையான தீ விபத்தில் மீண்டும் மக்கள் உயிரிழந்தது பற்றி அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் வருத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இவ்வாண்டு (2026) ஜனவரியில் சுவிட்சர்லாந்தின் மதுக்கூடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் மாண்டனர்; 115 பேர் காயமுற்றனர்.

குறிப்புச் சொற்கள்