ஜோகூர் பாரு: ஒற்றுமை அரசாங்கத்தில் விரிசல்கள் தொடர்ந்தால் பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஏராளமான வதந்திகள் பரவுவதைத் தாம் கவனித்து வருவதாகக் கூறினார் பக்கத்தான் ஹரப்பான் தலைவருமான திரு அன்வார்.
இப்போதைய நிலையில் மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை உறவு சுமுகமாக உள்ளது. கூட்டணியில் உள்ளவர்கள் உடன்பாடுகளுக்கு எதிராகச் செல்வது என முடிவெடுத்தால், அதன் பிறகு ஜோகூரிலும் இதர மாநிலங்களிலும் மட்டும் தேர்தல் நடைபெறாது,” என்றார் அவர். நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பாகாங், பினாங்கு ஆகிய மாநிலங்களைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு கூறினார்.
மலேசியாவின் தென் மாநிலமான ஜோகூரில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பான் மாநாட்டில் திரு அன்வார் சிறப்புரை நிகழ்த்தினார்.
“அரசாங்கத்தில் விரிசல்களைத் தவிர்த்து ஒற்றுமையை நீடிப்பது குறித்து பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவத்துடன் கலந்து ஆலோசிப்போம். தேவைப்பட்டால், முன்கூட்டியே பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்போம.
“நாங்கள் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம். சுமுகமாகப் பேச்சுநடத்த முன்வந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று கூறிய மலேசியப் பிரதமர், நல்லதோர் அரசாங்கத்துக்கு அரசியல் நிலைத்தன்மை முக்கியம் என்று வலியுறுத்தினார்.
பிளவுகளைப் பற்றிய பேச்சுகள் ஒருபக்கம் இருந்தாலும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தொடக்க காலக் கட்சிகளான பிகேஆர், டிஏபி, அமனா ஆகியன நிலையாக உள்ளன என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

